சவுக்கு சங்கர் உடல் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 8) உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசாரை இழிவாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது தாயார் கமலா(68) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தனது மகன் சங்கரை சிறையில் போலீசார் தாக்குவதாக அவரது வழக்கறிஞர் மூலம் தெரிந்துகொண்டேன். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தி தனது மகனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (மே 8) கோடைக்கால அமர்வான நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் ஆர்.கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன், “சிறையில் தாக்குதல் நடந்ததாகவும், அதனால் வலது கையில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் சவுக்கு சங்கர் வழக்கறிஞரிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும். இந்த முறை பாத்ரூமில் வழுக்கி விழுந்தார் என்ற போலீசாரின் வழக்கமான பதிலை சொல்ல முடியாது” என்று கூறினார்
போலீஸ் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, “சவுக்கு சங்கர் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய தலைவர் அவரை நேரில் சென்று பார்த்தார்” என்றார்
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், “மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று என்ன நடந்தது என தெரிந்துகொள்ள வேண்டும். அதனால் வழக்கை நாளை ஒத்திவைக்கிறோம். சங்கரின் உடல்நிலை குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இன்று மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது, “சிறையில் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதால் மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.
இதை கேட்ட நீதிபதி, “மதுரை சிறைக்கு மாற்றி உத்தரவிட தனக்கு அதிகாரம் இல்லை. சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பி கோரிக்கை வையுங்கள்” என்று கூறினார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கரை மே 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணைக்கு பின் அவரை கோவை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
காங்கிரஸ் உறவை முறிக்க தயாரா?: சாம் பிட்ரோடா கருத்தை குறிப்பிட்டு ஸ்டாலினுக்கு மோடி கேள்வி!
ராகுல் பேச்சில் 103 முறை அதானி, 30 முறை அம்பானி … மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!