சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!

அரசியல்

சமூகநீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இன்று(மார்ச் 29) நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர்,  “ நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்.  சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் – சமூகநீதி பேசும் ராமதாஸ் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை ரகசியமெல்லாம் கிடையாது…

இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல – அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும். இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை” என்று விமர்சித்தார்.

மேலும் அவர்,  “ 1969-இல் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – ஆதிதிராவிடர் நலத்துறை என்று அந்த மக்கள் பயனடையத் தனித்தனியாகத் துறையை உருவாக்கியவர் கலைஞர்தான்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, சமூகநீதிக்குப் புதிய பாதை அமைத்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்று முன்னேறி இருப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 18 விழுக்காடும் – பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் – இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் கலைஞர்தான்.

வன்னியர் சமுதாய மக்கள் 1987-ஆம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள். தனி இடஒதுக்கீடு கேட்டுக் கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை.

கலைஞர் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சரானதும், ஆட்சிக்கு வந்த 43-வது நாளில் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொடுத்தார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இடஒதுக்கீடுதான் அது.

வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார் கலைஞர். 1987-ஆம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்திற்கு, மூன்று இலட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள்.

சமூகநீதித் தியாகிகளை போற்றி மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் திறக்கப்பட இருக்கிறது” என்று குறிப்பிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த நேரத்தில் சில பேர் மறந்துபோன, மறைக்க நினைக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்த ஸ்டாலின்,  “கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டிற்கு, தலைவர் கலைஞரை அழைத்தார் ராமதாஸ்.

அன்றைக்கு மேடையில் என்ன பாராட்டிப் பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா அய்யா ராமதாஸ்? நீங்கள் மறந்தாலும் வன்னிய சமுதாய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

“1987-ஆம் ஆண்டுமுதல் இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. முதலமைச்சரைப் பார்க்கவே முடியவில்லை.

ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே… உங்களுக்கு நன்றி.. இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் மட்டும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தரவில்லை என்றால்,  கூலி வேலை செய்துவிட்டு, ஓட்டு மட்டும் போடும் ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, கலைஞரையே சாரும்” என்று சொன்னீர்களே… அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இராமசாமி படையாச்சியாருக்கு, சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று  வாழப்பாடி ராமமூர்த்தியும்- வன்னிய அடிகளாரும்- சி.என்.ராமமூர்த்தியும் கலைஞரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, சென்னை ஹால்டா சந்திப்பில் சிலை அமைத்தார் கலைஞர். அந்த நிகழ்ச்சியில், கலைஞருடன் சென்னை மேயராக நான் கலந்து கொண்டேன். எந்தச் சமூகமாக இருந்தாலும் அந்தச் சமூகத்தின் மேன்மைக்காகத் திட்டங்களைத் தீட்டித் தரும் சமூகநீதி இயக்கம்தான் தி.மு.க.

ஆனால் சமூகநீதி பேசும் மருத்துவர் அய்யா , சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கை கோர்த்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க!.

இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்.

ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ.க. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியையே பா.ஜ.க. கவிழ்த்ததே…

இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ.க. செய்திருக்கிறது… அதை மறந்துவிட்டாரா?

பா.ம.க.வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-இல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பா.ம.க. பாடுபடும் என்று சொல்கிறார்,

நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா?

மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? அய்யா ராமதாஸ் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க.

சாதிவாரி கணக்கெடுப்பை நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது. அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது. மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும். சென்சஸ் எடுக்க முடியாது.

இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதிப் போராளியான அய்யா ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை. தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார். அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

’சதுரங்க வேட்டை பட வசனம் போல தான்’… திமுகவை விமர்சித்த எடப்பாடி

ரூ.1,823 கோடி அபராதம் – ஐடி நோட்டீஸ்: காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *