எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: விரைவில் விசாரணை!

அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், “எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை சார்பாக ஒதுக்கப்பட்ட டெண்டரை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த மனுவில், “ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடி ஆகும். ஆனால் இந்த நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம், எடப்பாடி பழனிசாமியின் உறவினரான ராமலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டது.

வண்டலூர் – வாலாஜா பகுதியில் உள்ள 4 வழிச்சாலையை, 6 வழிச் சாலையாக மாற்ற ரூ.200 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம், எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் நெடுஞ்சாலைத் துறை கோட்டங்களின் கீழ் வரும் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் `வெங்கடாஜலபதி அண்ட் கோ’ நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.

இதுபோன்று சுமார் 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் முறைகேடாக எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். அவரது உறவினர் பி.சுப்பிரமணியம், சேகர் ரெட்டி, நாகராஜன் செய்யாத்துரை ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை 2018ல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தப்பட்டதால் இந்த வழக்கை வெளிப்படைத்தன்மையுடன் விசாரிக்க வேண்டும். எனவே வழக்கை சிபிஐ விசாரித்து, குற்றச்சாட்டுகள் மீது முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து அப்போதே எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கு 4 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ஆஜராகி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார்.
தமிழக அரசின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் என்று ஒப்புதல் தெரிவித்தார். அதன்படி வழக்கு விரைந்து பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *