செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அங்கு அவர் காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
திமுகவில் இதே நிலைமை இருக்கிறதா?
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அண்ணாவின் மீது கொண்ட பற்றால் கட்சி பெயர் அண்ணாவின் பெயரை சேர்த்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் அதிமுகவை வெற்றிகரமாக வழிநடத்தி சென்றவர் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே ஜனநாயகப்படி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி என்றால் அதிமுக தான். சாதாரண தொண்டன் ஒரு கட்சியின் தலைவர் ஆக முடியுமா? மாநிலத்தின் முதலமைச்சர் ஆக முடியுமா? திமுகவில் இதே நிலைமை இருக்கிறதா?
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலினுக்கு அப்புறம் உதயநிதியை திமுக மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அடுத்ததாக இன்பநிதியை ஏற்கவும் திமுக மூத்த தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது!
அதிமுக உழைப்பாளிகள் நிறைந்த கட்சி. இந்த கட்சியை பார்த்து ஸ்டாலின் பேசுறார். அதிமுக பத்து ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என்று வாய் கூசாமல் பேசுகிறார்.
முதன்முறையாக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். விவசாயிகளின் ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மனிதர்களுக்கு மட்டுமின்றி வாய்பேச முடியாத கால்நடைகளின் நலனுக்காக கால்நடைகளுக்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில் ரூ. 1000 கோடியில் அமைத்து கொடுத்தோம். இதை கூட திறந்து வைக்க கூட வக்கில்லாமல் இருப்பது தான் விடியா திமுக அரசு. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.
ஏமாற்றனும் என்றால் ஆசையை தூண்டனும்!
நீங்கள் எல்லோரும் சதுரங்க வேட்டை படம் பாத்திருப்பீர்கள். அந்த படத்தில் வரும் வசனம் போன்று தான் திமுக வாக்குறுதி உள்ளது. அதில் ’ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று சொன்னால், முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும்’ என்று ஒரு வசனம் வரும்.
அப்படி 2021 சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத 520 அறிவிப்புகளை திமுக வெளியிட்டது. அதில் 10 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை.
மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போது ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கிறார்கள். அதையும் உடனே கொடுக்கவில்லை.
பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு கொடுத்தார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் 27 மாதம் ஆனது? இதனால் மக்களுக்கு வரவேண்டிய 27 ஆயிரம் ரூபாய் பறிபோய் விட்டது. இதே அதிமுக என்றால் ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கொடுத்து 1000 ரூபாய் கொடுத்து இருப்போம்.
கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை!
அயலக அணி என்று திமுகவினர் வைத்திருக்கிறார்கள். எந்த கட்சியிலாவது அயலக அணி என்று இருக்கிறதா.. அப்படி ஒரு அணியை உருவாக்கி அந்த அணியில் இருக்கின்ற பொறுப்பாளர் வெளிநாட்டிற்கு போதைப்பொருள் கடத்தியிருக்கிறார். பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்.. ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்து விட்டது. அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்? பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.
காஞ்சிபுரம் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி வரதர் எழுந்தருளி தரிசனம் தருவார். இதற்கான முழு ஏற்பாடுகளும் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டது. இதுபோன்ற பலதிட்டங்கள் காஞ்சிபுரத்தில் அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.1,823 கோடி அபராதம் – ஐடி நோட்டீஸ்: காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!
RCB vs KKR: ‘பயப்படுறியா குமாரு’… கம்பீர்-கோலிக்கு பறக்கும் மீம்ஸ்கள்!