அதிமுக இனி என்னாகும்? மினி தொடர் – 5

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஜெயலலிதா… பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்லே… என்ற வசனத்துக்கு ஏற்றபடி அதிரடியாக மட்டுமல்ல; நாடு தழுவிய அளவிலே தனது செயல்பாடுகளுக்கான அதிர்வுகள் ஏற்படும்படி செயல்பட்டவர்.

ஜெ.வுக்கு பக்கத்தில் யாருமில்லை!

ஜெயலிதாவுக்கு ஒரு பிரச்னை என்றாலோ, ஒரு கொண்டாட்டம் என்றாலோ தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுமையிலிருந்தும் தலைவர்கள் அவருக்காக நின்றனர். ஜெயலலிதாவுக்கு மம்தா ஆதரவுக்கரம் கொடுத்தார், மாயாவதி ஆதரவுக்குரல் எழுப்பினார். ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு குரல் கொடுப்பார். ஏன், குஜராத் முதல்வராக இருந்த மோடியே ஜெயலலிதாவுக்கு தார்மீக ஆதரவை பல சந்தர்ப்பங்களில் வழங்கியிருக்கிறார். இதுமட்டுமல்ல… தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டனே ஜெயலலிதாவை இல்லம் தேடி வந்து சந்தித்துச் சென்றார்.

இத்தகைய ஆளுமைமிக்க ஜெயலலிதா தனக்குப்பின் அதிமுக என்னாகும் என்பதை மட்டும் அறிவியல்ரீதியாக யோசிக்கத் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ஜெயலலிதாவை அடுத்து அவரது ஆளுமையில், அரசியல் பிடிவாதத்தில், எதிரிகளைப் பார்க்கும் கடுமையில் என அவரது பண்பு நலன்களில் அவருக்குப் பக்கத்திலேகூட யாரும் இல்லை. இந்த கசப்பான உண்மையைத்தான் கடந்த செப்டம்பரிலிருந்து நடக்கும் நிகழ்வுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால் தமிழ்நாட்டில் பெரும்பான்மை பெற்ற அவரது ஆட்சியும், மிகப் பெரும் தொண்டர் பலத்தைப் பெற்றுள்ள அவரது கட்சியும் ஏன் இப்படி பந்தாடப்படுகின்றன.

What will happen to AIADMK - Mini Series 5

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், அது தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்றும் வலியுறுத்துவதில் நியாயம் இருக்கிறது. அதேநேரம், இந்த கோரிக்கைகளை சாக்காக வைத்துக்கொண்டு… ஒரு மாநிலத்தின் ஆட்சியை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளுவதில் ஓர் நாட்டின் மைய அரசு இயந்திரமே முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் தமிழ்நாட்டிலேகூட சிற்சில தலைவர்களைத் தாண்டி வேறு யாரும் இந்த ஜனநாயக கட்டமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டிக்கவே இல்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மட்டும்தான், ‘அதிமுக-விலும் தமிழ்நாட்டு அரசிலும் நிகழ்த்தப்படும் மாற்றங்களுக்குப் பின்னால் பாஜக உள்ளது’ என்று கூறிவருகிறார். பாஜக-வின் பிரதானமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற வகையைத் தாண்டி… ஆரம்பகால அதிமுக தளகர்த்தர் என்ற உணர்வின் அடிப்படையில்தான் திருநாவுக்கரசர் இவ்வாறு சொல்கிறார் என்று கருத வேண்டியுள்ளது. அவரைத் தாண்டி, தமிழகத்தின் மாநில சுயாட்சி மீதான இந்த கட்டற்ற தாக்குதலை தமிழகத்திலேயே யாரும் கண்டிக்கவில்லை என்றால், அடுத்த மாநிலத்திலிருந்து யார் குரல் கொடுப்பார்கள்? இங்குதான் ஜெயலலிதா விட்டுச்சென்ற வெற்றிடம் அப்பட்டமாகத் தெரிகிறது.

நாசூக் காங்கிரஸ்… பகிரங்க மோடி!

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மத்திய அரசாங்கத்தை ருசி பார்த்துவந்த காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களில் தனது அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ற மாதிரி ஆட்சிகளை மாற்றியிருக்கிறது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற துறைகளை அரசியல் உத்திகளுக்கு ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் தகவல் தொழில்நுட்பங்கள், பிரேக்கிங் நியூஸ்கள், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற தகவல்தொடர்பு வளர்ச்சியடையாத அந்தக் காலத்திலேயேகூட காங்கிரஸ் இதுபோன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை பகிரங்கமாக நடத்தியது கிடையாது. அப்போதைய காலகட்டங்களில் பகிரங்கமாக நடத்தியிருந்தால்கூட அது, அந்தளவு எக்ஸ்போஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஆனபோதும், மிகவும் நிதானமாக நாசூக்காகவே தனது அரசியல் ஆயுதமாக அரசு எந்திரத்தைப் பயன்படுத்தியது காங்கிரஸ்.

ஆனால் இப்போதைய மோடி அரசு, இதில் எந்த தார்மீக வரைமுறைகளையோ, நெறிமுறைகளையோ பின்பற்றுவதே இல்லை. ‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை, போட்டுத் தாக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்’ என்பது மட்டுமே இந்த விஷயங்களில் மோடியின் கொள்கையாக இருக்கிறது.

இதை தனிப்பட்ட கட்சி விவகாரங்களில்கூட ஒருவகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் நிர்வாகரீதியான, அரசுரீதியான, ஆட்சியியல்ரீதியான விவகாரங்களிலேயே மோடி அரசு பட்டவர்த்தனமான அரசியலை செய்துகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம், ஜெயலலிதாவின் ஆளுமைக்கும் அவருக்குப் பிறகு அவரது இடத்தில் அமர்ந்திருக்கும் ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆளுமைகளுக்குமிடையே நிலவும் மிக நீண்ட தூரம்தான்.

What will happen to AIADMK - Mini Series 5

25 வருடங்களுக்கு…

இதையெல்லாம் தாண்டி, தினகரன் மீது பி.ஜே.பி.க்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் விஷயம், ‘எனக்கு இப்போது 53 வயசு. இன்னும் 25 வருஷத்துக்கு தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யை உள்ளே விடமாட்டேன்’ என்று, அவர் கொடுத்த ஒரு பேட்டிதான் என்று தமிழக பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரே தன் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். தினகரன் ஒன்றும் திராவிட இயக்கத்தின் தூண் அல்ல. அவர் திராவிட இயக்கக் கொள்கைகளில் தோய்ந்தவரும் அல்ல. ஆனாலும் அதிமுக மீது பி.ஜே.பி. தொடுத்திருக்கும் ஜனநாயகத்துக்குப் புறம்பான யுத்தத்தை எதிர்கொள்ளும்வகையில் இந்த அரசியல் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார்.

ஆனால் அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரையோ, ‘தினகரன் மீது வரும் வழக்குகளுக்கும் இப்போதைய அரசியல் சூழல்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை’ என்கிறார்.

மண் சோறு சாப்பிடும் தொண்டர்களும், தங்கத் தட்டில் சாப்பிடும் தலைவர்களும் உள்ள கட்சிதான் அதிமுக. ஆனாலும் அதை மக்கள் களத்தில் சந்திக்காமல் கொல்லைப்புறத்தில் வைத்து சேவலை அறுப்பதுபோல் அறுக்கத் துடிக்கும் கரங்களை மற்ற கட்சிகள் பார்த்துக் கொண்டிருந்தால் நாளை இதேநிலை மற்ற கட்சிகளுக்கும் வராது என்பது என்ன நிச்சயம்?

-ராகவேந்திரா ஆரா

-தொடரும்…

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 1

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 2

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 3

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 4

What will happen to AIADMK - Mini Series 4

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *