2024 ஐபிஎல் தொடரில், மே 10 அன்று ‘வாழ்வா? சாவா?’ என்ற போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன், அபாரமாக விளையாடி அடுத்தடுத்து சதம் விளாச, அந்த அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு, டெரில் மிட்சல், மொயீன் அலி, எம்.எஸ்.தோனி ஆகியோர் கடுமையாக போராடியபோதும், அந்த அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே-ஆஃப் ரேஸில் தொடர்கிறது.
இந்நிலையில், இப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மெதுவாக பந்துவீசியதால், குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.24 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இப்போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடிய அனைத்து போட்டியாளர்களுக்கும், ரூ.6 லட்சம் அல்லது 25% போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மார்ச் 26 அன்று விளையாடிய போட்டியில், மெதுவாக பந்துவீசியதற்காக, சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்து.
ஒருவேளை, குஜராத் அணி மேலும் ஒரு போட்டியில் மெதுவாக பந்துவீசினால், சுப்மன் கில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பத்மபூஷன் விருதுடன் சென்னை வந்த பிரேமலதா… ரோடு ஷோவுக்கு தடை…அதகளமான ஏர்போர்ட்!
குட் நியூஸ் மக்களே! – 11 மாவட்டங்களில் இன்று கனமழை