இயக்குநர் அமீர் யார் என்பதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் சொல்ல ‘ பருத்தி வீரன் ‘ என்கிற ஒரு படமே போதும். ஆனால் நடிகர் அமீரை தமிழ் சமூகத்திற்கு யார் என்று வெளிச்சம் காட்டியது வெற்றி மாறன் தான். ‘ வட சென்னை ‘ திரைப்படத்தில் அமீர் நடித்த ‘ராஜன் ‘ கதாபாத்திரம், தற்கால இளைஞர்களிடையே அமீர் – ஐ ராஜனாகவே கொண்டு சேர்த்தது.
சமீபத்தில் அமீர் சந்தித்த பிரச்சனைகள், சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு பின் அமீர் நடிப்பில் வெளியாகும் ஒரு அரசியல் திரைப்படம் ‘ உயிர் தமிழுக்கு ‘. அமீர் ஒரு திரை இயக்குநர் மட்டுமல்லாது அரசியல் விமர்சகரும் கூட.
ஆக, அவரது நடிப்பில் அரசியல் நய்யாண்டி திரைப்படம் வெளியாவதே பல எதிர்பார்ப்புகளை உண்டாக்கும். அதே எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் என எதையும் காணாமல் படத்தை பார்க்கச் சென்றிருந்தோம்.
ஒன்லைன் :
சென்னையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். ஆனால், அவரது மரணத்திற்கு காரணம் அந்த எம்.எல்.ஏ – விற்கும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளரான பாண்டியனுக்கும் இடையே உள்ள விரோதம் தான் எனப் பரவலாக பேசப்படுகிறது.
யார் இந்த பாண்டியன்?அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? போன்ற விஷயங்களை சொல்வதே ‘ உயிர் தமிழுக்கு ‘ படத்தின் ஒன்லைன்.
விரிவான விமர்சனம் :
இந்தப் படத்தை அரசியல் சட்டையர் ஜானரில் எடுக்க வேண்டும் என நினைத்ததும், அதற்கு சரியான ஆளான அமீர் – ஐ கதையின் நாயகனாக்கியது எல்லாம் சரியான முடிவு தான். ஆனால் ஒரு அரசியல் சட்டையர் படத்திற்கு டிரெண்டில் உள்ளவற்றை வசனமாக பேசுவது, வாட்ஸ் ஆப் ஜோக்குகளை அள்ளித் தெளிப்பது, நேரடியாகவே சில கட்சிகளை சாடும் வசனங்களை வைப்பது மட்டும் போதாது என்பதை இயக்குநர் ஆதம் பாவா தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், அரசியல் சட்டையர் போல தொடங்கும் இந்தப் படம் காமெடி, லவ் என எங்கெங்கோ சென்று அனுமார் வால் போல் நீண்டு, ஒரு வழியாக ஒரு இடத்தில் நிறைவடைகிறது. இதை எழுத்திலேயே இயக்குநர் ஆதம் பாவா சரி செய்திருக்கலாம். படத்தில் இருக்கும் சில அடிப்படை தவறுகளை பார்க்கும் பொழுது படத்தின் மேக்கிங்கிலேயே பல சிக்கல்கள் இருந்திருக்கக் கூடும் என புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதெல்லாம் சாக்காக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
அமீர் என்கிற ஒரு சிறந்த நடிகரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஆக, மிக சுமாரான ஒரு கதாபாத்திரத்தை ஏதேதோ செய்து காப்பாத்த முயன்றுள்ளார் அமீர். நாம் கண்டு வியந்த நடிகர் அமீரா இது என என்னும் அளவுக்கு ஹீரோயினைப் பார்த்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான ஹீரோயின் பாத்திரத்தின் வடிவமைப்பு மிக மோசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் முதல் பாதியில் அவர் வரும் காட்சிகளில் வெறும் பொம்மையாகவே இருக்கிறார். இதுபோன்ற அரசியல் படங்களில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக, உண்மைக்கு நெருக்கத்துடன் அமைந்தால் தான் அந்தப் படத்தை ரசித்துப் பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி கூட அமைக்கப்படவில்லை.
ஹீரோயின் வீட்டு வாசலில் அமீர் பிரசாரம் செய்யும் காட்சி, பொதுக் கூட்டம் நடத்தும் ஒரு காட்சி, ஒரு பிரச்சனையை ஹீரோ சரி செய்யும் ஒரு காட்சி என எந்த ஒரு காட்சியும் சுவாரஸ்யமாக அமைக்கப்படவில்லை. வித்யாசாகர் இசையில் உள்ள பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. அரசியல் நய்யாண்டி படம் என்பதற்காக ஆங்காங்கே வைக்கப்பட்ட நடப்பு அரசியல் குறித்த வசனங்கள் ஓகே. ஆனால் அவை படத்தோடு சேராமல் வெறும் வசனங்களாக மட்டுமே உள்ளது.
மொத்தத்தில் ‘ மாறன் ‘ திரைப்படத்திற்கு பிறகு அமீர் நடிப்பில் வெளியான ஒரு படு சுமார் திரைப்படம் தான் ‘ உயிர் தமிழுக்கு ‘
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!
ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல கூடாது : சிபிஐ கடும் வாதம்!
Comments are closed.