அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 1

Published On:

| By Balaji

அனகாபுத்தூர் ராமலிங்கம் என்ற தொண்டரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. அதில், தன்னை இணைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர். இக்கட்சியை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றினார்.

எம்.ஜி.ஆர். காலத்துக்குப்பின் லேசாக தள்ளாட்டம் கண்ட அதிமுக-வை ஜெயலலிதா தாங்கிப்பிடித்தார், நிலைநிறுத்தினார், வெற்றிகள் கண்டார். இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி, தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்குப் பின் மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஆளுங்கட்சி என்ற சாதனையைப் படைத்தார்.

ஆனால் ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுக இப்போது திக்குத்தெரியாமல் டாஸ்மாக் வாசலில் சரிந்துகிடக்கும் குடிமகனைப் போல கிடக்கிறது. பலரும் கேலி பேசுகிறார்கள், சிலர் எட்டி உதைக்கிறார்கள்.What will happen to AIADMK - Mini Series 1

ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனபோது பிஜேபி-க்கு இது பிடிக்கவில்லை. கொஞ்ச நாட்களில் சசிகலா முதல்வர் ஆகும் முயற்சியில் இறங்க… திடுதிப்பென வந்தது சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார்.

இதோ, இன்று மீண்டும் சசிகலாவின் அக்கா மகனான அதிமுக-வின் துணை பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் மீதும் புகார்கள், வழக்குகள் குவிகின்றன. திகார் சிறையில் அடைக்கப்படலாம் தினகரன் என்று, டெல்லி வட்டாரங்கள் பேச ஆரம்பித்துவிட்டன.

தமிழகத்தின் ஆளுங்கட்சி, ஐம்பது எம்.பி.,க்கள் என்று ஜனநாயக பலம்வாய்ந்த அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஏன் இப்படி நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறுகிறது?

கடந்த சில மாதங்களாக அதிமுக-வில் நடக்கும் பரபரப்புப் படலங்களின் பின்னணியை அலசுகிறது இந்தத் தொடர்.

சசிகலா பேச்சை கேட்காத தினகரன்!

ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக தொடரவிடாமல், தான் முதல்வராக ஆசைப்பட்டார் சசிகலா. அப்போதே உடனடியாக தன்மீது மத்திய அரசின் கோபப்பார்வை படிந்ததை உணர்ந்தார். ஆனால் சுதாரித்துக்கொள்ளும் முன்பே மொத்தமும் முடிந்துவிட்டது. கூவத்தூர் கேம் நடந்துகொண்டிருக்கும்போதே சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது சசிகலாவுக்கு.

இந்நிலையில், தினகரன்… சசிகலாவிடம்,‘சிறைக்குப் போவதற்குமுன் என்னை துணை பொதுச்செயலாளராக அறிவித்துவிடுங்கள். கட்சியை நான் பாத்துக்குறேன்’ என்றார். ஆனால் சசிகலாவோ… ‘நம் குடும்பம் மீது டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது. என் விஷயத்திலே அது தெளிவாகப் புரிந்துவிட்டது. அதனால், இப்போதைக்கு வெளிப்படையாக நம் குடும்பத்தினர் பதவிக்கு வர வேண்டாம். கட்சியின் சீனியர்களிடம் பொறுப்பைக் கொடுப்போம். அப்போதுதான் கட்சிக்கு எதிரான போர் நிறுத்தப்படும்’ என்று சொன்னார்.

தினகரனோ, ‘கட்சியை நடத்துமளவுக்கு கரிஷ்மாட்டிக் லீடர் யாருமில்லை. நம் குடும்பத்தின் கையில் லகான் இருந்தால்தான் சரியா இருக்கும்’ என்று சசிகலாவிடம் வற்புறுத்தினாராம். ஆனால் தினகரன் கேட்கவில்லை. நாளை சிறைக்குச் செல்கிறார் என்றால், இரவு நமது எம்.ஜி.ஆருக்கு தினகரனும், வெங்கடேஷும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்கள் என்றும், தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறைக்குப் போகிறபோக்கில் தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கிய சசிகலா மீது குவிந்த கோபத்தின் நெருப்பு சற்றும் குறையாமல் தினகரன் மீதும் குவிந்தது.

What will happen to AIADMK - Mini Series 1

நாடி பிடித்த பிஜேபி

கடந்த 2௦14 நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா இந்தியா முழுதும் அமோக வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய அந்தத் தேர்தலில் பிஜேபி மட்டும் 282 இடங்களைப் பிடித்து அறுதிப் பெரும்பான்மை பெற்றது. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 336 இடங்களைப் பிடித்தது. அப்போதே இந்திய மேப்பை வைத்துக்கொண்டு பிஜேபி ‘வீக்’ ஆக இருக்கும் மாநிலங்களை ஆராய்ந்தார் மோடி. தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தாங்கள் மிக பலவீனமாக இருப்பதை உணர்ந்த மோடி, முதல் ‘சிகப்பு டிக்’கை தமிழ்நாட்டின் மீது குறித்தார்.

காலில் விழுந்த முதல்வர்கள்!

What will happen to AIADMK - Mini Series 1

காத்துக்கொண்டிருந்த பிஜேபி-க்கு காலம் தந்த வாய்ப்பாக அமைந்தது, தமிழகத்தின் அசைக்கமுடியாத இரும்பு இமேஜாக கருதப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சை, அதைத் தொடர்ந்த அவரது மரணம். முற்றிலும் அரசியல் செய்ய ஆரம்பித்தது பிஜேபி. ஆனால் அதற்கு முகாந்திரம் கொடுத்துக்கொண்டே இருந்தது அதிமுக.

What will happen to AIADMK - Mini Series 1

ஜெயலலிதா மறைவுக்குப்பின், டெல்லி சென்று மரபுப் படி பிரதமரைச் சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர். அப்போது தலைமைச் செயலாளருடன் சேர்ந்து வழக்கமான சந்திப்பை முடித்துவிட்டு… பிரதமர் மோடியை தனியாக தான் மட்டுமே சந்தித்தார் ஓ.பி.எஸ். அப்போது மோடியின் காலில் விழுந்து வணங்கிய பன்னீர், தான் கொண்டுவந்திருந்த அரசியல்ரீதியான ஆங்கிலக் கடிதத்தை மோடியிடம் வாசித்துக் காட்டினார். இதே தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவரது டெல்லி விஜயம் எப்படி இருந்தது என்று கண்முன்னே ஓடவிட்டார் மோடி. அந்த இடத்தில் பன்னீரை நினைத்து சிரித்துக்கொண்டார்.

ஒரு மாத காலத்துக்குள் பன்னீர் பதவியிலிருந்து விழுந்து சசிகலா ஆதரவுடன் முதல்வரான எடப்பாடியும் மோடியை சந்தித்தார். வழக்கமான சந்திப்பு முடிந்தது. எடப்பாடியும் மோடியை தன்னந்தனியாக சந்தித்து பன்னீரைவிட அதிக பவ்யம் காட்டினார்.

இந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த மோடி ஒரு முடிவெடுத்துவிட்டார்.

-ராகவேந்திரா ஆரா

தொடரும்….

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share