ஒரு படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் பல விதம் உண்டு. அதில் ஒரு மையக் கதாபாத்திர வடிவமைப்பை சுற்றி நிகழுவதாக அமைப்பது இயக்குநர் சாந்தகுமாரின் பாணி.
அவரது முந்தைய திரைப்படங்களான ‘மௌனகுரு ‘, ‘ மகாமுனி ‘ என இரு திரைப்படங்களின் திரைக்கதையும் அப்படியான திரைக்கதைகள் தான். அதை மிக ஆழமாக கையாளக் கூடியவர் சாந்தகுமார். அப்படிப்பட்ட இயக்குநர் சாந்த குமார் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ ரசவாதி ‘ .
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு
இந்தத் திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், சுஜித் சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா, ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சரவண இளவரசு – சிவா இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தொகுப்பு வேலைகளை சாபு ஜோசப் பார்த்துள்ளார். இசையமைப்பாளர் தமன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒன்லைன்
சித்த வைத்தியராக கொடைக்கானலில் வசிக்கும் அர்ஜூன் தாஸ், கதாநாயகியான தான்யாவை சந்திக்கிறார். கடந்த வாழ்க்கையில் பெரும் வலிகளை சந்தித்த இந்த இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இந்த நிலையில், கொடைக்கானலுக்கு காவல் ஆய்வாளராக வரும் சுஜித் சங்கர் இவர்களின் வாழ்க்கையை குலைக்க நினைக்கிறார். அதற்கு பின் என்ன ஆகிறது என்பதே ‘ ‘ரசவாதி ‘ திரைப்படத்தின் கதை.
அனுபவ பகிர்தல்
1) மௌனகுரு, மகாமுனி போன்ற வித்தியாசமான திரைப்படங்களையும், கதாபாத்திரங்களையும் படைத்து வரும் இயக்குநர் சாந்தகுமார் அவர்களின் திரை எழுத்தை மீண்டும் திரையில் கண்டது, ஒரு நல்ல திரை அனுபவம்.
2) பல நாட்களுக்கு பிறகு ஒரு சர்வதேச தரத்தில் எழுதப்பட்ட ஒரு சைகோ வில்லன் கதாபாத்திரம்
3) எடுத்துக்கொண்ட ஜானரில் எந்த வித நிபந்தனைகளையும் வைத்துக்கொள்ளாது எடுக்கப்பட்ட ஒரு படத்தைக் கண்ட அனுபவம்.
4) திரைப்படம் என்பதைத் தாண்டி ஒரு புத்தகத்தை படிப்பது போல் அமைக்கப்பட்ட சில காட்சி அமைப்புகள்.
5) கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதி.
விரிவான விமர்சனம்
இந்தக் கதையின் ஒன்லைன் மிக வழக்கமாக தோன்றினாலும் தன்னுடைய தனித்துவமான திரைமொழி, கதாபாத்திர வடிவமைப்பு போன்றவற்றை வைத்து நம்மை ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் சாந்த குமார். குறிப்பாக இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம், அதை ஏற்று நடித்த சுஜித் சங்கரின் நடிப்பு உலகத் தரம் வாய்ந்தது.
குறிப்பாக மன நல மருத்துவரிடம் அவர் பேசும் ஒரு காட்சி, எப்போதும் மனதிற்குள் ஒரு குரூரத்தை வைத்தபடியே அவர் பாவிக்கும் சில சின்னச் சின்ன பாவனைகள் என அனைத்தும் அற்புதம். மிரட்டி இருக்கிறார் எனச் சொன்னால் அது மிகையாகாது.
இந்த ஜானருக்கு ஏற்ற ஒளிப்பதிவு பல இடங்களில் சிறப்பாக இருந்தது. குறிப்பாக குறைவான வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் அந்தக் காட்சிகளுக்காக அழுத்தத்தை திரையில் மிக நேர்த்தியாக கடத்துகிறது. தமனின் இசை படத்திற்கு மற்றொரு பலம். வழக்கமாக ஒரு டூயட் பாடல் இருக்க வேண்டிய இடமான ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு மாண்டேஜ் காட்சியில் வெறும் பின்னணி இசையை வைத்தது நல்ல யுக்தி.
முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், சாந்தகுமார் யுனிவர்ஸ்ஸில் உள்ள அமைதியான மன முதிர்ச்சி கொண்ட கதாநாயகனாக சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகிகளான தன்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ் அந்தந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
புத்தக வாசிப்பாளர்கள் குறித்த ஒரு வசனம், தன்னுடைய திரைப்படமான ‘ மகாமுனி ‘ திரைப்படத்தையே கலாய்ப்பது போன்ற ஒரு காட்சி, வீரம் குறித்து பேசப்படும் ஒரு வசனம் என ஆங்காங்கே தென்படும் சாந்த குமார் டச் சிறப்பு. இரண்டு வலிகளை சந்தித்த மனங்கள் காதலிப்பதை மிக முதிர்ச்சியாக காட்சிப்படுத்திய விதம் தொட்டு பல இடங்களில் வழக்குமுறைகளை தவிர்த்த விதம் சிறப்பு.
படத்தின் பெரிய பலவீனம் இரண்டாம் பாதியில் வரும் ஒரு பிளாஷ்பேக் காட்சி. அதில் சொல்லப்படும் ஒரு கருத்து, காட்சியமைப்பு என எதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இரண்டாம் பாதியின் திரைக்கதையில் இருக்கும் தொய்வு கொஞ்சம் சுவாரஸ்யமாக அற்றதாக தெரியலாம். நிச்சயம் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் கத்திரி போட்டிருக்க வேண்டிய இடம் அது. அதை மட்டும் கொஞ்சம் பொறுமையாக கடந்து விட்டால் நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் தான் ‘ ரசவாதி ‘ .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சாதனை நாயகன் ஜேம்ஸ் அண்டர்சன்
தளபதி 69! ரூ.250 கோடி கேட்கும் விஜய்… தயாரிக்கப் போவது யார்?