இத்தொடரின் கடந்த பாகத்தின் இறுதியில், சம்பந்திக் கூட்டணியின் சரவெடி வெடிக்க ஆரம்பித்தது என்று முடித்திருந்தோம். தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் தங்கமணி கூட்டணி வெடித்தே விட்டது.
ஓ.பி.எஸ்.சுக்காக ஐ.என்.எஸ்.சில் கூட்டம்?
ஏப்ரல் 17-ம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமி அரசை ஆதரிக்கும் அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் நாளை காலை சென்னையில் இருக்க வேண்டும் என்று அழைப்பு அனுப்பப்பட்டது. மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமா? அதில் என்ன முடிவெடுப்பார்கள் என்ற பரபரப்பு கிளம்பிய நிலையில்… பிறகுதான், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஐ.என்.எஸ். போர்க் கப்பலை பார்வையிட அழைக்கப்பட்டார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் உண்மையிலேயே ஐ.என்.எஸ். போர்க் கப்பலில் நடந்தது, எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கூட்டம்தான்.
இந்திய நாட்டின் கடற்படையுடைய போர்க் கப்பலைப் பார்வையிட தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடப்பட்டிருக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் அழைக்கப்படாமல் அ.தி.மு.க. என்ற ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த அதுவும் அக்கட்சியின் குறிப்பிட்ட ஒரு பிரிவு சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் இந்திய போர்க் கப்பலுக்கு அழைத்து கூட்டம் போட்டது எப்படி என்பதே பலரின் வியப்பும், கேள்வியும்.
இதற்குப் பின்னால் மத்திய அரசு இருக்கிறது என்றும், இந்த சூழலில் வேறு எங்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினாலும் தேவையற்ற சர்ச்சைகளும் பரபரப்புகளும் கிளம்பும் என்பதால் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலிலேயே அதிகாரபூர்வமற்ற வகையில், கூட்டியிருக்கிறார்கள் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.
அந்தக் கூட்டத்தில், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் ஒதுக்கிவைக்க வேண்டும் என்றும், அந்த புள்ளியிலேயே இரு பிரிவினரும் இணைய வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சூழலில் இப்படி செயல்படாவிட்டால் ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயம் பயம் எடப்பாடி!
ஓ.பன்னீர் கிளப்பிய தியானப் புயலை அடுத்து அ.தி.மு.க.வின் நெருக்கடியான சூழலில் தன் முந்தைய சாய்ஸான எடப்பாடி பழனிச்சாமியையே முதல்வர் ஆக்கினார் சசிகலா. எடப்பாடிக்கு முதல்வர் பதவியைக் கொடுத்தபோது… ‘எந்த சூழலிலும் எந்த காரணத்தை முன்னிட்டும் முதல்வர் பதவியைக் கேட்டபோது திரும்பிக் கொடுப்பேன்’ என்று சசிகலாவிடம் சத்தியம் செய்து கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட சிக்னல்கள் சசிகலா வாங்கிய சத்தியத்தை விட மிகப்பெரிய வலியையும் பயத்தையும் எடப்பாடிக்கு ஏற்படுத்தின. ஏனென்றால், சில மாதங்களுக்கு முன் ரூபாய் நோட்டு விவகாரத்தில் சிக்கி ரெய்டுக்கு ஆளான சேகர் ரெட்டியிடம் நடத்திய விசாரணையில்… ரெட்டிக்கும் எடப்பாடிக்குமான ஆழமான தொடர்புகள் மத்திய அரசிடம் ஆதாரத்தோடு உள்ளன.
இவற்றை எல்லாம் வைத்து எடப்பாடிக்கு தூண்டில் போட்ட டெல்லி மேலிடம், ‘’ஓ.பன்னீர் போல நாங்கள் சொன்னதைக் கேட்டால் ஆட்சியில் இருக்கலாம். இல்லையென்றால்…’’ என்ற செய்திகளை எடப்பாடிக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.
எனவே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் செய்து கொடுத்த சத்தியத்தை விட தன் பதவியை… தன் இப்போதைய அரசியல் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளவே எடப்பாடி மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்.
அதன் விளைவுதான் தன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோதும்… அப்போது மீடியாக்களில் கசிந்த ஆவணத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் முதல்வர் பெயரே இருக்கிறது என்ற ஆதாரம் வெளியானபோதும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் எடப்பாடி.
ஏனென்றால் இதெல்லாம் தம்மைக் குறிவைத்து நடப்பவை அல்ல… தினகரனைக் குறிவைத்தே தீட்டப்பட்டிருக்கின்றன என்பது எடப்பாடிக்கு நன்கு தெரியும். அதனால்தான் தலைமைச் செயலகத்திலே வருமான வரித்துறையினர் புகுந்தபோது அமைதி காத்த ஓ.பன்னீரைப் போலவே தன் அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் புகுந்தபோதும் அமைதி காத்தார் எடப்பாடி.
இருவரின் அமைதிக்கும் நோக்கம் ஒன்றுதான்…
-ராகவேந்திரா ஆரா
தொடரும்….
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 1
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 2
அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 3