அ.தி.மு.க. இனி என்னாகும்? மினி தொடர் – 3

Published On:

| By Balaji

ஜெயலலிதாவோடு 35 வருடங்களுக்கும் மேலாக உடன் இருந்த சசிகலாவுக்கு… சமீப மாதங்களில் பி.ஜே.பி.யின் போக்கு பற்றிய அரசியல் பிரக்ஞை இருந்ததில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் சசிகலாவுக்கு இருந்த அதே அதிகாரம் நோக்கிய அவசரம்தான் தினகரனையும் இன்று முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

தினகரனின் பொட்டன்ஷியல்!

சசிகலா குடும்பத்தினரில் பெரும்பாலானோர் ஏன் எல்லாருமே கள அரசியலுக்கு வராமல், லாபி அரசியலையே செய்து வந்தவர்கள். நிழல் உலக நாயகர்களாகவே அவர்களின் பெரும்பாலான அரசியல் வாழ்வை கழிக்கிறார்கள். அந்தக் குடும்பத்திலே விதிவிலக்காக… 99-லேயே கள அரசியலுக்கு வந்து பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தினகரன். அடுத்த தேர்தலில் தோற்றதும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார் ஜெயலலிதா. இதேசமயம்… தினகரனை கட்சியின் முக்கியப் பதவியான பொருளாளர் பதவியிலும் அமர வைத்தார். சசிகலா குடும்பத்தினரில் வேறு யாருக்கும் இப்படி ஒரு வெளிப்படையான அரசியல்வாதி என்ற நிறம் கிடைத்ததில்லை. ஆனால் அப்படி இருந்த ஒரே ஒரு ஆளான தினகரனையும் கடந்த 2011 முதல் ஜெயலலிதா அருகே சேர்க்கவில்லை.

சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து அகற்றுவதையே அஜென்டாவாக வைத்திருக்கும் பி.ஜே.பி… ஓ.பன்னீர், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரையும் விட தினகரனை கொஞ்சம் உயரத்தில் வைத்தே பார்க்கிறது. அதனால்தான் அவரை ஆரம்பத்திலேயே அப்புறப்படுத்திவிட துடிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தம் தலைமையை திருப்திப்படுத்தும் அளவுக்கு செயல்படும் மந்திரிகள்தான். தமிழ்நாட்டின் தேவையை போராடிப் பெறும் அளவுக்கான முதல் மந்திரிகள் அல்லர். இவர்கள் டெல்லி போனாலும், தங்களது கோரிக்கையை இன்னொரு ஆள் மூலமாகத்தான் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஆனால் தினகரன் ஆங்கிலத்தில் பேசி டெல்லி வட்டாரத்தில் செல்வாக்கும் செலுத்தும் திறன் உள்ளவர். அவரது அஜென்டாவே… ஆர்.கே. நகர் தேர்தலில் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆவது, அதன் பின் முக்கியமான ஒரு துறைக்கு அமைச்சர் ஆவது. வரும் 2021 தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு முதல்வர் ஆகி மீண்டும் தேர்தலை சந்திப்பது. தினகரனின் இந்த அஜென்டாவை அறிந்துகொண்டுதான், டெல்லி தனது அஜென்டாவை பட்டவர்த்தனமாக பகிரங்கமாக செயல்படுத்துகிறது.

What will happen to AIADMK - Mini Series 3

சித்திரையில் விழுந்த சிதறல்!

‘’இப்போதே தினகரனை ஒதுக்கினால் நான்கு ஆண்டுகால ஆட்சி தொடரும், இல்லையென்றால் விஜயபாஸ்கர் போல ஒவ்வொரு அமைச்சருக்கும் ஏற்படும்’’ என்பதுதான் தமிழக அமைச்சர்களுக்கு டெல்லி சொல்லி அனுப்பிய செய்தி. இந்த செய்தியின் ஃபாலோ அப் சித்திரை முதல் நாளிலேயே தெரிந்தது.

தினகரனை சந்தித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார்கள் அமைச்சர்கள் என்று செய்திகள் முதலில் வந்தன. ஆனால் அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் இடையே நடந்தது வாழ்த்துப் பரிமாற்றம் அல்ல, வாக்குவாதம்.

அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் தினகரனை நோக்கி… ‘’ஆர்.கே.நகர் தேர்தலுக்காக அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து 200 கோடி கொடுத்திருக்கோம். கட்சி நிதிலேர்ந்து 200 கோடி எடுத்திருக்கீங்க. மணல் காசு எல்லாம் விஜயபாஸ்கர் கிட்டதான் போயிட்டிருக்கு. மொத்த செலவையும் விஜயபாஸ்கர்கிட்ட கொடுத்தீங்க. இப்ப என்னாச்சு… விஜயபாஸ்கர் வீட்லயே பேப்பர் எடுத்து அவமானப்படுத்திட்டாங்க. அவரை முதல்ல அமைச்சரவை லேர்ந்து நீக்குங்க. இல்லேன்னா இதை வச்சே ஒட்டுமொத்த அமைச்சரவையையும் நொறுக்கிடுவாங்க’’ என்று ஆரம்பித்து வைத்தனர்.

இதை மற்ற சில அமைச்சர்களும் பிடித்துக் கொள்ள, ‘’ இப்ப விஜயபாஸ்கரை நீக்கினா, நாமளே ஒத்துக்கிட்டோம்னு ஆயிடாதா?” என்று தினகரன் கேட்க.. தினகரனை நோக்கி அடுத்தடுத்த வார்த்தைகளை ஏவ ஆரம்பித்தனர் அமைச்சர்கள்.

விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க முடியாத காரணத்தை தினகரன் விளக்க… இரு அமைச்சர்களும் அந்த அறையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர். உடனே செங்கோட்டையன் அவர்களைப் போய் கையைப்பிடித்து அழைத்து உள்ளே வந்து சமாதானம் பேசினார்.

அது தற்காலிக சமாதானம்தான் என்பதை அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டின.

What will happen to AIADMK - Mini Series 3

பெரா அணி!

தினகரன் அணியை பாமர்களும் பெரா அணி என்று சொல்லும் அளவுக்கு பெயர் கெட்டுவிட்டதை இப்போதைய அமைச்சர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். தினகரனின் மீதான வழக்குகளை இப்போதுதான் விசாரிப்பது போல ஊடகங்களில் பரபரப்பாய் செய்திகளை வர வைக்கிறார்கள். இடைத்தேர்தல் நேரத்தில் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதில் மத்திய அரசின் கைங்கர்யம் இல்லை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அந்த அளவுக்கு தினகரன் மீது ஊழல் கறையை நிரந்தரமாக சுமத்தும் திட்டங்கள் கச்சிதமாக நகர்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் தினகரனோடு இன்னமும் இருக்க வேண்டுமா என்ற விதையை தூவியிருக்கிறார் இதுவரை தினகரன் அணியில் இருப்பதாக சொல்லப்படும் அமைச்சர் தங்கமணி. இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தி என்பதுதான் கூடுதல் விசேஷம். இந்த சம்பந்திக் கூட்டணியின் சரவெடி வெடிக்க ஆரம்பித்தது.

-ராகவேந்திரா ஆரா

தொடரும்…

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 1

அதிமுக இனி என்னாகும்? – மினி தொடர் – 2

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share