|

அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த ஆக்சன் பிளான்…சற்றும் எதிர்பார்க்காத பாஜக!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியில் வந்து பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் இந்தி பெல்ட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்யப் போகும் பிரச்சாரம் தேர்தல் முடிவில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் மார்ச் 21, 2024 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். கடந்த 50 நாட்களாக திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவால், சிறையிலிருந்து கொண்டே முதலமைச்சராகவே தொடர்ந்து கொண்டிருந்தார்.

கெஜ்ரிவால் மனைவி முன்வைத்த எமோஷனல் அப்பீல்

கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, கெஜ்ரிவாலுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் களமிறங்கினார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்திய கூட்டத்தில் சுனிதா கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசியது அனைவராலும் கவனிக்கப்பட்டது. மேலும் சிறையிலிருந்து கெஜ்ரிவால் கொடுக்கும் கடிதங்களையும் அவரது மனைவியே படித்து வீடியோக்களை வெளியிட்டார். கெஜ்ரிவாலுக்காக சுனிதா நடத்திய ரோடு ஷோவும், அவர் முன்வைத்த எமோஷனல் அப்பீலும் மக்களிடையே பல ஆதரவுகளை அவருக்கு உருவாக்கியது.

கெஜ்ரிவாலின் உடல்நல சிக்கல்களும், அமலாக்கத்துறையும்

சிறையில் அவருக்கு ஏற்பட்ட உடல் நல சிக்கல்களும், மருத்துவ வசதிகளைக் கோரியபோது அதற்கு அமலாக்கத்துறை பதிலளித்த விதங்களும் நாடு முழுக்க பேசு பொருளானது. கெஜ்ரிவாலுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால், வழக்கமாக அவர் ஆலோசனை மேற்கொள்ளும் மருத்துவருடன் வீடியோ கான்ஃபிரங் வழியாக ஆலோசனை செய்துகொள்ள அனுமதி கேட்ட போது, அமலாக்கத்துறை, ”அவர் ஜாமீன் பெறுவதற்காக வேண்டுமென்றே பழங்களையும், இனிப்புகளையும் எடுத்துக் கொண்டு சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறார்” என்று நீதிமன்றத்தில் சொன்னது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

மேலும் கெஜ்ரிவால் தன்னுடைய ரத்த சர்க்கரை அளவு 250 முதல் 320 வரை அதிகரித்தபோதும் தனக்கு இன்சுலின் கொடுக்க சிறை நிர்வாகம் மறுக்கிறது என்று நீதிமன்றத்தில் மனு அளித்ததும் மனித உரிமைகள் சார்ந்து பெரும் பேசு பொருளானது. அமலாக்கத்துறை மற்றும் சிறைத்துறையின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஒரு முதலமைச்சரை பாஜக அரசு இப்படி கையாளுவதை டெல்லி மக்கள் ரசிக்கவில்லை. இது தேர்தலில் வாக்குகளாக எதிரொலிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் கிடைத்த இடைக்கால பிணை

கெஜ்ரிவால் அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு என்று கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, கெஜ்ரிவாலுக்கு பெயில் கொடுத்துவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று கடைசி வரை கடுமையாக எதிர்த்தது அமலாக்கத்துறை. ஆனால் அமலாக்கத்துறையின் எதிர்ப்புகளை நிராகரித்து, ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது தேர்தல் நேரத்தில் எதற்காக கெஜ்ரிவாலை கைது செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பியதுடன் அவருக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால பிணையும் வழங்கியது உச்சநீதிமன்றம்.

திட்டங்களை மாற்றும் பாஜக

”இதனை பாஜக மேலிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்காது என்று அவர்கள் நம்பியிருந்தனர், ஆனால் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதில் எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது பாஜக மேலிடத்திற்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது. இதனால் இனிமேல் கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என பல திட்டங்களை பாஜக மேலிடம் தீட்டி வருகிறது” என்கிறார்கள் டெல்லியிலிருக்கும் அரசியல் விமர்சகர்கள். பாஜக சீனியர் தலைவர்களும், மோடியும் டெல்லியில் ஏற்கனவே திட்டமிட்டிருந்த கூட்டங்கள் மற்றும் பேரணிகளை மாற்றியமைத்து, திட்டமிட்டிருந்ததை விட அதிக கூட்டங்களில் பங்கேற்கும் வகையில் பாஜக திட்டங்களை தீட்டி வருகிறது.

சிறை வாசலிலேயே பிரச்சாரத்தை துவங்கிய கெஜ்ரிவால்

திகார் சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட நான் திரும்பி வந்துவிட்டேன் என்று அறிவித்து சிறை வாசலிலேயே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். 21 நாட்கள் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணித்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று ஆத் ஆத்மி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

வலதுசாரி இளைஞர்களையும் கவரும் கெஜ்ரிவாலின் பிரச்சாரம்

அரவிந்த் கெஜ்ரிவாலின் பேச்சு இந்தி பெல்ட்டில் பலரையும் கவரக் கூடியது. அதுவும் குறிப்பாக அவரது பேச்சு பாஜகவின் ஆதரவாளர்களாக இருக்கக் கூடிய வலதுசாரிகள் மத்தியிலும் பிரபலமடையக் கூடியது. கெஜ்ரிவால் ஹனுமன் கோயிலில் இருந்து பிரச்சாரத்தினை துவக்கியுள்ளது, வலதுசாரி சிந்தனையுள்ள இளைஞர்கள் மத்தியில் தனது பிரச்சாரம் எடுபடும் என்பதால் தான் என்று டெல்லியின் அரசியல் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

கெஜ்ரிவாலின் பிரச்சார பிளான்

ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளுங்கட்சியாக உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 25 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுகின்றன. பஞ்சாபில் கூட்டணி இல்லாமல் ஆம் ஆத்மியும், காங்கிரசும் 13 தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியுள்ளன.

தலைநகர் டெல்லியில் கெஜ்ரிவாலின் பிரச்சாரம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியில் ரோடு ஷோ நடத்தி பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். டைகர் இஸ் பேக் என்ற போஸ்டர்கள் டெல்லியில் ஒட்டப்பட்டுள்ளன. கெஜ்ரிவால் வெளியில் வந்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே போட்டு வைத்திருந்த தனது மொத்த பிரச்சாரத் திட்டங்களையும் மாற்றி புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

டெல்லியின் நிலை என்ன?

டெல்லி முழுதும் கெஜ்ரிவாலுக்கு பரவலாக செல்வாக்கு இருந்தாலும், வடகிழக்கு டெல்லி, சாந்த்னி செளக் மற்றும் மேற்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளில் கெஜ்ரிவாலின் பரப்புரை பாஜகவிற்கு பெரும் சவாலாக அமையும் என்று பாஜக வட்டாரங்களிலேயே சொல்கிறார்கள். குடிசைப் பகுதிகள் அதிகமுள்ள இத்தொகுதியில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்கனவே செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. தற்போது காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி இரணடு கட்சிகளும் இணைந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருவதால், ஓட்டுகள் பிரியாமல் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக பெற்ற வாக்கு சதவீதங்களை சேர்த்தால் 40.62% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. அதேசமயம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை சேர்த்தால் 48% வருகிறது. அந்த தேர்தலில் 7 தொகுதிகளையும் வென்ற பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 46.4% சதவீதமே. இதனால் தான் இந்த கூட்டணியை ஆபத்தானதாக பாஜக பார்க்கிறது.

குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தல்

குஜராத்திலும் இதேபோல் ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அங்கு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 13% சதவீத வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சி 27% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இரண்டையும் சேர்த்தால் 40% சதவீதம் வருவதால், அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு பிரச்சாரம் செய்தால் குஜராத்திலும் பல இடங்களை பாஜக இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தான் கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தது என்று குஜராத் மாநில ஆம் ஆத்மி நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

பல மாநிலங்களுக்கு பயணிக்கும் கெஜ்ரிவால்

கெஜ்ரிவாலை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியிலிருந்து கட்சிகள் அழைக்கும் பகுதிகளுக்கும் கெஜ்ரிவால் செல்ல இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரம் இனிவரும் நாட்களில் தீவிரமடையும் என அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாய் சொல்லி வருகிறார்கள். ஹரியானா மாநிலத்தில் ஏற்கனவே பாஜக தனது ஆட்சியைத் தக்கவைக்க திணறி வரும் சூழலில், அம்மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால், அங்கு கெஜ்ரிவால் மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் இந்தியா கூட்டணிக்கு பாசிட்டிவாக மாறும் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாபை பொறுத்தவரை ஆம் ஆத்மியும், காங்கிரசும் எதிரெதிராகப் போட்டியிடுவதால், அரவிந்த் கெஜ்ரிவால் கைதையொட்டி மக்களிடையே அவருக்கு கிடைத்துள்ள ஆதரவு பஞ்சாபிலும் எதிரொலிக்குமோ என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கவலையில் உள்ளனர். ஆனால் பஞ்சாபில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் இந்தியா கூட்டணியின் கணக்கில் தான் சேரப் போகிறது என்பதால் இந்தியா கூட்டணிக்கு பஞ்சாபின் முடிவுகள் பின்னடைவைத் தராது.

மோடி ஓய்வு பெறுவாரா?

சிறையிலிருந்து வெளியில் வந்த கெஜ்ரிவால் தனது முதல் கூட்டத்திலேயே பாஜகவிற்குள் கலகத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். பாஜகவினரை நோக்கி உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ”மோடியா?, அவருக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகப் போகிறது. 75 வயதுக்கு மேல் கட்சியில் இருப்பவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை பாஜகவில் கொண்டு வந்ததே மோடி தான். எனவே அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற வேண்டும். மோடியின் கேரண்டிகளை நிறைவேற்றப் போவது யார்? அமித்ஷா நிறைவேற்றப் போகிறாரா? நீங்கள் ஓட்டு போடப் போகும்போது ஒன்றை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் அமித்ஷாவுக்கு ஓட்டு போடுகிறீர்கள். மோடிக்கு அல்ல” என்று பாஜக நிர்வாகிகளுக்குள்ளேயே கலகத்தை ஏற்படுத்தும் வகையில் அம்பை ஏவியிருக்கிறார்.

மேலும் மாநிலங்களின் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய பாஜக மூத்த தலைவர்களையெல்லாம் ஓரங்கட்டும் திட்டத்தினை மோடி செய்து வருகிறார் என்றும் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலின் பேச்சிற்கு அமித்ஷா பதிலளித்திருக்கிறார். ”மோடிக்கு 75 வயது ஆகப் போவது குறித்து கெஜ்ரிவால் மகிழ்ச்சியடையத் தேவையில்லை. அது போன்ற எந்த பிரிவும் பாஜகவின் சட்ட விதிகளில் இல்லை. மோடி தான் இந்த நாட்டை தலைமையேற்று வழிநடத்திச் செல்வார். பாஜகவிற்குள் எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்” என்று அமித்ஷா கெஜ்ரிவாலின் பேச்சுக்கு ரியாக்ட் செய்திருக்கிறார்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று விமர்சித்துக் கொண்டிருந்த பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்காமல், தனி ரூட் எடுத்து பாஜகவினை பதில் சொல்ல வைத்து முதல் பாலிலேயே சிக்சர் அடித்து, அடித்து ஆடத் துவங்கியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் என்று ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் விடுதலை ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டார் தொகுதி பார்வை… கள்ளக்குறிச்சி: திமுக, அதிமுகவின் கணக்குகள்!

தேர்தல் ஆணையம் மிரட்டுகிறது – கார்கே

கர்நாடக தேர்தலில் திருப்பம்… வடகர்நாடகா முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாகிறதா? சரிகிறதா பாஜகவின் கோட்டை?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts