பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் டெல்லியில் இன்று (மே 11) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக அரசியல் விமர்சகரும், யூடியுபருமான சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கடந்த 4ஆம் தேதி கைது செய்தனர்.
மேலும் அவர் வந்த காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கருக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சென்னை போலீசாரால் மேலும் இரண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே தேனி மாவட்ட போலீசார் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று சோதனை செய்தனர். அப்போது சங்கர் வீட்டில் இருந்து கஞ்சா, செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை அடுத்து சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
பேட்டி எடுத்தவர் தான் முதல் குற்றவாளி!
அந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “பேட்டி கொடுத்தவரை விட பேட்டி எடுத்த வரை தான் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும், தற்போது யூட்யூப் சேனல்களை நெறிமுறைப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” என்று கூறியது.
ஏற்கெனவே அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் ஜாமீனில் வந்த நிலையில், தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் பெலிக்ஸை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸை டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது ’அரசியலில் இருக்கும் பெண்கள் அனைவரும் அட்ஜஸ்ட் செய்து வந்தவர்களே’ என்று பேசியதற்காக இவர் மீது சைபர் கிரைம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கிலும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கி வெளியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பஞ்சாயத்துக்கு வராத கமல்… லிங்குசாமி ஏமாற்றம்!
டாப் 10 செய்திகள் : கெஜ்ரிவால் ரோடு ஷோ முதல்… சூரிய காந்த புயல் எச்சரிக்கை வரை!
இதே போல எஸ் வி சேகரு, பெண் பத்திரிகை நிருபருங்களை கண்டபடி பேசினதா ஒரு வழக்கு இருக்கே, அது என்னாச்சு?