“ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்தார்.

பின்னர் திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

தெலங்கானாவிலும் இதே போன்ற சூழல் ஏற்பட்டபோது அம்மாநில ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

அதே போல தமிழக அரசு ஆளுநர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக ஆளுநரை மாற்றுவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பீர்களா என்ற கேள்விக்கு, “நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்தால் எந்த பிரச்சனையும் இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாடுகளுக்கு சென்றால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களை விமர்சித்து பேசியிருந்தார்.

ஆளுநரின் விமர்சனத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்திருந்தார்.

அப்போது தொடர்ந்து எதிர்மறையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடருமா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநர் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆளுநர் ரவி மீது வழக்கு தொடரும் எண்ணம் எதுவும் இல்லை. அவர் அரசியல் செய்ய வேண்டாம் என்பதே எங்கள் விருப்பம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் ஆளுநர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செல்வம்

புதுக்கட்சி:  திமுக, அதிமுக ’பைலா’ ஆய்வு செய்யும் விஜய்

“திருமாவின் வாழ்த்து ஊக்கத்தையும் எழுச்சியையும் தருகிறது” – வைகோ

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1