James Anderson: 2002 டிசம்பர் 15 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்துலாந்து அணிக்காக அறிமுகமாகி, 2003 மே 22 அன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் களம் கண்ட ‘ஸ்விங் கிங்’ ஜேம்ஸ் அண்டர்சன், தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2015 மார்ச் 13 அன்று தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் அண்டர்சன், தொடர்ந்து இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாயங்களை நிகழ்த்திவந்தார். இந்நிலையில், தனது 22 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு, தனது ஒளிரும் டெஸ்ட் பயணத்தை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய அண்டர்சன், தனது இந்த பயணத்தை அதே லார்ட்ஸ் மைதானத்தில் நிறைவு செய்துகொள்ள உள்ளார்.
வரும் ஜூலை 10 அன்று, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இங்கிலாந்து விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டியே, தனது கடைசி டெஸ்ட் போட்டி என ஜேம்ஸ் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.
நான் சிறுவயதில் இருந்தே மிகுந்து நேசித்த ஒரு விளையாட்டை, என் நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடியது மிக சிறப்பாக இருந்தது. இனி எனது நாட்டின் உடையை அணிந்து கொண்டு மைதானத்திற்குள் நுழைவதை, நான் தவற விடப் போகிறேன். ஆனால், நான் அடைந்ததைப் போலவே, மற்றவர்களும் தங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு வழிவிட இதுவே சரியான நேரம்”, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 22 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தில், ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்த்திய சாதனைகள் பல.
இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள ஆண்டர்சன், இந்த இமாலய இலக்கை எட்டும் 3வது வீரர், மற்றும் முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
தனது பெயரில் 32 5-விக்கெட் ஹால்களை வைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக அதிக முறை 5-விக்கெட் ஹால்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முதன்மையான 7 நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அனைத்து அணிகளுக்கு எதிராகவும் குறைந்தது 50 விக்கெட்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது வரை 39877 பந்துகளை வீசியுள்ள ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை வீசியுள்ள வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், 269 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த 42-வயது இளம் சாதனை நாயகனை இனி டெஸ்ட் கிரிக்கெட் மிஸ் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தளபதி 69! ரூ.250 கோடி கேட்கும் விஜய்… தயாரிக்கப் போவது யார்?
வாடிவாசல் : சூர்யாவுக்கு வில்லன் நான்தான் : அமீரின் அப்டேட்!