வடலூரில் தடையை மீறி போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் இன்று (மே 4) கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன்பாக உள்ள பெருவெளியில் ரூ.99 கோடி செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், சர்வதேச ஆய்வு மையம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.
இந்நிலையில், வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.
ஆனால், தடையை மீறி இன்று (மே 4) மாலை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ் உள்ளிட்டோர் வடலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரையும் வடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?
வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நா.த.க. மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (மே 4) வடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
இதற்கு முழுமையாக அனுமதி மறுத்திருப்பதோடு, தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனையும் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச் செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைது செய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படும்.
வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும் எனவும் பேரறிவிப்பு செய்கிறோம்.” என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: 2வது நாளாக குறையும் தங்கம் விலை!
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!