குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை குறைத்ததற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இன்று (ஜூலை 31) கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் கடந்த 27ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கண்டனத்தை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பதிவு செய்தனர்.
சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 29ம் தேதி ஆதிர் ரஞ்சன், தான் வாய் தவறி அவ்வாறு கூறிவிட்டேன் என்றும், தன்னை மன்னித்து விடுங்கள் என்றும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதன் பிறகும் பாஜக மகளிரணி சார்பில் ஆதிர் ரஞ்சன், சோனியாவுக்கு எதிராக இந்தியா முழுதும் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழக பாஜக சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் கண்ணியத்தை குறைத்ததற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், குடியரசு தலைவரை தான் அவமரியாதையாக குறிப்பிட்டதற்கு மக்களவையில் ஸ்மிருதி ராணி கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவர் குடியரசுத் தலைவரின் பெயரை குறிப்பிடும் முன், மாண்புமிகு அல்லது மேடம் என்று அழைக்காமல், தொடர்ந்து திரெளபதி முர்முவின் பெயரை மட்டுமே திரும்ப திரும்ப கூறி அழைத்தார்.
இது தெளிவாக மாண்புமிகு குடியரசுத் தலைவரின் பதவியை இழிவுபடுத்துவதாகும். எனவே மரியாதையற்ற முறையில் குடியரசுத் தலைவரின் பெயரை மட்டுமே கூறி மக்களவையில் பேசியதற்காக, அமைச்சர் ஸ்மிருதி இரானி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தனது மகள் மீது வைத்த குற்றச்சாட்டினை எதிர்த்து ஸ்மிருதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா