பிரதமர் மோடி இன்று கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் மறுபக்கம் அம்மாநில முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.38 ஆயிரம் கோடி தேவை என்று மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டது.
ஆனால் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.682.67 கோடி நிதி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே கர்நாடகாவுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக 18,171 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு 3454 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை முன்பு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி சிலைக்கு முன்பு கையில் சொம்பு ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து டி.கே.சிவகுமார் கூறுகையில், “மாநில அரசு வறட்சி நிவாரணம்தான் கேட்கிறது. பிச்சை அல்ல.. விவசாயிகளின் நலனுக்காக கேட்கிறோம்.
இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திலும் போராட்டம் தொடரும். ஒரு கூட்டாட்சி கட்டமைப்பில் நமக்கு கொடுக்க வேண்டியதை மத்திய அரசு கொடுக்கவில்லை.
வறட்சியால் மாநிலத்தில் ரூ.50,000 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஏற்பட்ட இழப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மறுபக்கம், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கர்நாடகா மாநிலத்தில் இன்று 4 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெலகாவி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “மக்களின் பணத்தை எடுத்து அதனை தங்களின் வாக்கு வங்கியினருக்கு மறு விநியோகம் செய்ய, காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்புகிறது.காங்கிரஸ் கட்சி எப்போதுமே வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய நலன் என்பதை தாண்டி ஒரு குடும்பத்தின் நலன் என்ற குறுகிய வட்டத்திற்குள் செயல்பட்டு வருகிறது” என்று விமர்சித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சீதை வேடத்துக்கு சாய் பல்லவி மேட்ச் இல்லையா? என்ன சொல்றாங்க பாருங்க!
கொளுத்தும் வெயில் : அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைதான்… வானிலை அப்டேட்!