சீதை வேடத்துக்கு சாய் பல்லவி மேட்ச் இல்லையா? என்ன சொல்றாங்க பாருங்க!

Published On:

| By indhu

Ramayana : Sai Pallavi is not a suitable choice..?

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரன்பீர் கபூர்,  ராமாயணம் திரைப்படத்தில் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமர் ஆகவும், நடிகை சாய் பல்லவி சீதா ஆகவும் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஹிந்தியில் சிச்சோரே, தங்கல் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் நிதேஷ் திவாரி ராமாயணம் திரைப்படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஓம் ரவுத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக கொண்டு வெளியான “ஆதிபுருஷ்” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில்,  மீண்டும் ராமாயணம் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது.

நிதேஷ் திவாரி இந்த படத்தை இயக்குவதாலும் ரன்பீர் கபூர் இந்த படத்தில் நடிப்பதாலும் ஓரளவு நம்பிக்கையுடன் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ராமாயணம் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை சாய் பல்லவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை செட்டுக்குள் நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கெட்டப்பிலும், நடிகை சாய் பல்லவி சீதா கெட்டப்பிலும் ஒன்றாக நடந்து வருவது போலவும், உரையாடிக் கொண்டிருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் கண்ட ரசிகர்கள் சிலர் சீதா கதாபாத்திரத்திற்கு நடிகை சாய் பல்லவி பொருத்தமாக இல்லை என்றும், இன்னும் சிலர் ரன்பீர் கபூர் தான் ராமர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு இல்லை என்றும் மாறி மாறி எக்ஸ் தளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் ரன்பீர் கபூரின் தீவிர ரசிகர்கள் ராமாயணம் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றனர். ராமாயணம் திரைப்படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் நடிகர் யாஷ் ராவணன் ஆக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பாபி தியோல், சன்னி தியோல், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொளுத்தும் வெயில் : அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலைதான்… வானிலை அப்டேட்!

நீலகிரி ஸ்ட்ராங் ரூம்… 26 நிமிட ஃபுட்டேஜ் இல்லை: கலெக்டர் ஷாக் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel