நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி செயலிழந்ததால் 26 நிமிட ஃபுட்டேஜ் பதிவாகவில்லை என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அருணா இன்று (ஏப்ரல் 28) விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. ஸ்டார் தொகுதியான நீலகிரியில் திமுக துணை பொதுச்செயலாளரும், சிட்டிங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நீலகிரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன. கல்லூரியை சுற்றிலும் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் அறையை சுற்றிலும் 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இங்கு அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட சிசிடிவி கேமராக்களின் நேரலை காட்சிகள் 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 27) இரவு அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் ஒரே நேரத்தில் தடைப்பட்டது.
அங்கிருந்த திமுக, பாஜக, அதிமுக பாதுகாப்பு முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணாவை தொடர்பு கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் 20 நிமிடங்களில் கோளாறை சரி செய்தனர்.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 28) நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அதில், ” வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களுக்கும் மாலை 6.17-லிருந்து 6.43 வரை வேலை செய்யவில்லை. அதனால் அந்த 26 நிமிட ஃபுட்டேஜ் நம்மிடம் இல்லை. எதுவும் பதிவாகவில்லை.
அதிக வெப்பம் காரணமாக ஷாட் சர்க்யூட் ஏற்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் இணைப்பு சரிசெய்யப்பட்டது. இருப்பினும் அதனை சரி செய்ய 20 நிமிடங்கள் ஆகின.
அரசியல் கட்சி முகவர்கள் விருப்பப்பட்டால், அவர்களை ஸ்ட்ராங் ரூம் அறைக்குள் அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளேன். ஸ்ட்ராங் ரூமில் குளறுபடி ஏற்பட 200 சதவிகிதம் வாய்ப்பில்லை.
எதிர்காலத்தில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் அரசாங்கத்தின் முத்திரை மட்டுமின்றி, அந்தந்த கட்சிகளின் சார்பாகவும் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் சிஆர்.பி.எப். படை பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால், பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் தற்போது வரை இல்லை.
அனைத்து வாக்கு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது” என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா விளக்கமளித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வீர தீர சூரன் : மூன்று கெட்டப்பில் நடிக்கும் விக்ரம்?
கோடைக்கால விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம்: எடப்பாடி எதிர்ப்பு!