சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 12) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.
தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்த ஜோடி, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் பவர் பிளே முடிவில் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். தொடர்ந்து 7-ஆவது ஓவரில் சிமார்ஜித் சிங் வீசிய பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து தடுப்பாட்டம் ஆடி வந்த பட்லர் 9-ஆவது ஓவரில் 21 ரன்களுடன் வெளியேறினார்.
இதனையடுத்து ஆடிவந்த சஞ்சிவ் சாம்சன், ரியான் பராக் ஜோடியின் வேகத்திற்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.
சாம்சன் 15 ரன்களிலும், துருவ் ஜூரல் 28 ரன்களிலும் வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய ஷுப்மன் துபே டக் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தவித்தது.
கடைசியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. சென்னை அணி தரப்பில் சிம்ரஜித் சிங் 3 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.
இதனால் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவிந்திரா மட்டையை சுழற்றினர்.
சிஎஸ்கே வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர். 4-வது ஓவரில் ரச்சின் ரவிந்திரா 27 ரன்களுடன் வெளியேறினார். அடுத்ததாக மிட்சல் களமிறங்கினார். இவர் 8-வது ஓவரில் சாஹல் வீசிய பந்துவீச்சில் எல்பிடபிள்யூ அவுட்டானார்.
அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலியும் 10 ரன்களுடன் வெளியேற, ருதுராஜ் மட்டும் நிலையாக நின்று அணிக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ஆடிவந்தார்.
இதனால் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிறகு 145 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. ருதுராஜ் 42 ரன்களுடனும், சமீர் ரிஸ்வி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பிளே ஆஃப் தகுதி சுற்றுக்கு செல்ல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட நிலையில், சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூகுள் மேப் காட்டிய பாதை… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்!