யூடியூப் வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை, எலான் மஸ்க் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார்.
உலகில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வரும் நிலையில் அனைத்துக்குமான தளமாக தனது எக்ஸ் தளத்தை மாற்றும் முயற்சியின் அங்கமாக, புதிய வீடியோ செயலியை எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார்.
எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான யூடியூபின் சந்தையை பாதிக்கக்கூடும். நஷ்டத்தில் தத்தளிக்கும் எக்ஸ் தளத்தை லாபகரமாக மாற்றும் முயற்சியில், மூன்று மணி நேர முழு திரைப்பட நீளத்திலான வீடியோக்களையும் அதில் பதிவிட எலான் மஸ்க் ஏற்பாடு செய்தார்.
பின்னர் எக்ஸ் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, மேற்படி வீடியோக்களை ஸ்மார்ட் டிவிக்களில் காண ஏதுவாக வீடியோ செயலி ஒன்றையும் எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார்.
இந்த வீடியோ செயலி ஒப்பீட்டளவில் நடப்பிலிருக்கும் யூடியூபுக்கு இணையான வசதிகளை கொண்டிருக்கும். முதற்கட்டமாக அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் எலான் மஸ்கின் வீடியோ செயலியை பெற இருக்கின்றன.
சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் வீசாட் சமூக ஊடக செயலிக்கு இணையாக எக்ஸ் தளம் என்பதை அனைத்துக்குமான சூப்பர் ஆப் ஆக மாற்றும் முயற்சியிலும் எலான் மஸ்க் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த வரிசையில் கடந்த அக்டோபர் மாதம் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை எக்ஸ் தளத்தின் பயனர்கள் பெறுவதற்கான வசதியை எலான் மஸ்க் வெளியிட்டார்.
அடுத்தபடியாக, பணப்பரிவர்த்தனைக்கான அனுகூலங்களையும் எக்ஸ் தளத்தில் உள்ளடக்க அவர் முயற்சி செய்து வருகிறார்.
முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த வசதிக்காக, மாகாணங்கள் தோறும் வங்கிகள் வாயிலாக எக்ஸ் தளத்துக்கான அனுமதி பெறும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கண்களைச் சுற்றி கருவளையமா… கவலை வேண்டாம்!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்.. உணவுகளை வீணாக்காமல் இருப்பது எப்படி?
காங்கிரஸ் – திமுக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து: எத்தனை சீட்?