வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்த நிலையில் மே 7ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று(மார்ச் 28) கர்நாடகாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார்.
பெலகவி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “வாக்கு வங்கி அரசியலுக்காக நமது நாட்டின் ராஜாக்களுக்கு எதிராக பேச துணிவிருக்கும் காங்கிரஸ் கட்சியினரால் நவாப்புகள் சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களுக்கு எதிராக பேச முடிவதில்லை.
பாஜக மக்களின் சொத்துகளை அதிகரிக்க வேலை செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் சொத்துக்கள் வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள் மற்றும் பெண்களின் ஆபரணங்கள், தாலி ஆகியவற்றை எக்ஸ்ரே செய்து, ஒவ்வொரு வீட்டிலும் சோதனை நடத்தி சொத்துக்களை கைப்பற்றுவார்கள்.
பின்னர் அதை வாக்கு வங்கிக்காக தங்களுக்கு பிடித்தவர்களுக்கு கொடுக்க விரும்புகிறார்கள். இந்த கொள்ளை நடக்க நீங்கள் அனுமதிப்பீர்களா? என்று ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் குறிப்பிட்டு பேசினார்.
மேலும் அவர், “காங்கிரஸ் கட்சி இந்த எண்ணத்தை கைவிட வேண்டும். நான் உயிருடன் இருக்கும் வரை இதை நடக்க விடமாட்டேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மோடி, “சத்ரபதி சிவாஜி மகாராஜா, கிட்டு ராணி சென்னம்மா போன்ற சிறந்த ஆளுமைகளை காங்கிரஸ் அவமதித்துள்ளது. ஆனால் இந்த ராஜாக்களின் நிர்வாகமும் தேசபக்தியும் இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது.
அம்பேத்கரின் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் பரோடாவின் மகாராஜா.
ஆனால் மகாராஜாக்களின் பங்களிப்புகளை காங்கிரஸ் நினைவில் கொள்ளவில்லை.
வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்ட அமைப்பான பிஎஃப்ஐ அமைப்புக்கு ஆதரவு அளித்து வருகிறது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் சரணடைவீர்களா?.
பாஜக பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்து அதன் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளது” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஐபிஎல் 2024: RCBக்கு 201 ரன்களை இலக்கு நிர்ணயித்த GT