குக்கி இன சமூக அழிப்புக்கு முக்கிய காரணகர்த்தா மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தான் என்று அம்மாநில பாஜக எம்.எல்.ஏவான பாவ்லியன்லால் ஹாக்கிப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி என இரு சமூகத்திற்கு இடையே கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. மே3 ஆம் தேதி தொடங்கிய இந்த கலவரத்தில் இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
இணைய சேவை முடக்கத்தால் மணிப்பூரில் நடப்பது வெளியே தெரியாத நிலையிலும், தொடர்ந்து கலவரத்தை ஒடுக்க கடந்த 2 மாதங்களாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்தன.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ஒருநாள் முன்னதாக வெளியான மணிப்பூர் வீடியோ நாட்டு மக்களை நடுங்க வைத்தது.
அதில், இரண்டு குக்கி இன பெண்களை மெய்தி இன ஆண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்து மனசாட்சியையும் உலுக்கியது.
இதனையடுத்து, மணிப்பூர் கலவரம் குறித்து கடந்த 80 நாட்களுக்கும் மேலாக வாய்திறக்காமல் இருந்த பிரதமர் மோடி, முதன்முறையாக ’வீடியோவில் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்’ என்று கூறி சென்றார்.
எனினும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில பாஜக தலைவரும், முதல்வருமான பைரேன் சிங் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரம் அரசின் உதவியோடு தான் நடைபெற்றுள்ளதாக அம்மாநில பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் மணிப்பூரில் சிறுபான்மையின குக்கி சமூகம் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களுக்கு தனி மாநிலம் கோரி முதல்வர் பைரேன் சிங்குக்கு 10 பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதினர். இதில் பாஜகவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களில் ’பாவ்லியன்லால் ஹாக்கிப்’பும் ஒருவர்.
பைரன் சிங்கின் தவறான சித்தரிப்பு!
இவர் மணிப்பூர் கலவரம் குறித்து இந்தியா டுடே பத்திரிக்கைக்கு எழுதியுள்ள கட்டுரையில், “மணிப்பூர் கலவரத்திற்கு மாநில அரசு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரம் என்பது இரு சமூகத்திற்கு இடையேயான வன்முறையாகத் தொடங்கிய மோதலை, ’போதை பயங்கரவாதிகளுக்கு’ எதிரான மாநிலப் போராக முதல்வர் பைரன் சிங் சித்தரிக்க முயற்சித்ததில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடிவாரத்தில் குக்கி குடியிருப்புகளைத் தாக்கி எரிப்பதில் தீவிரவாதிகளான மெய்தி போராளிகளுக்கு உதவுவதற்கு அரசுப் படைகள் உதவியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
குக்கி இன அழிப்பின் முக்கிய காரணகர்த்தா!
மேலும் அவர், “மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமான மெய்தி இன மக்களின் ஆதரவைப் பெற்ற முதல்வர் பைரன் சிங் மெய்தி லீபுன் மற்றும் அரம்பாய் தெங்கோல் போன்ற ஆர்.எஸ்.எஸ் ஆதரவு குழுக்களுடன் மறைமுகமாக கைகோர்த்து உள்ளார். பைரேன் தான் குக்கி இன சமூக அழிப்புக்கு முக்கிய காரணகர்த்தா.
எங்கும் ஒரு சார்புடைய அரசாங்கம் அமைதிக்கு கேடு விளைவிக்கும். அத்தகைய சார்பு மணிப்பூரில் எப்போதும் இருந்தாலும், தற்போதைய முதல்வர் பைரேன் சிங்கின் கீழ் அது வலிமையாக செயல்படுத்தப்படுகிறது.
மணிப்பூர் கலவரத்தில் ஈடுப்பட்ட பெரும்பான்மையான மெய்தி சமூகத்தினருக்கு பாஜக ஆளும் மாநில அரசாங்கமும் மறைமுக ஆதரவை கொடுத்துள்ளது” என்று ஹாக்கிப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரே கலவரம் நடைபெற்றதற்கு பைரேன் சிங் தான் காரணம் என்று நேரிடையாக தெரிவித்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா