திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக புறப்பட்டு இன்று (செப்டம்பர் 16) வேலூர் சென்றடைந்தார்.
வேலூரில் திமுக முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த செயலி மூலம் தமிழக அரசின் செயல்பாடுகள், அரசு திட்டங்கள் குறித்த விவரங்களை அறியலாம்.
வேலூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாலை 5.55 மணிக்கு சென்ட்ரலில் இருந்து ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் விஐபி பெட்டியில் முதல்வர் ஸ்டாலின் பயணித்தார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பயணித்தனர்.
இரவு 8.40 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், குடியாத்தம் எம்.எல்.ஏ அமுலு, வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்டாலின் மாவட்ட செயலாளர் நந்தகுமாரின் அனுக்குலா விடுதிக்கு சென்றார்.
அங்கே இன்றிரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை மேல்மனவூர் அகதிகள் முகாம்களில் புதிதாக கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைக்கிறார். பின்னர் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.
செல்வம்
திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
கொடநாடு பற்றி தனபால் பேசக்கூடாது : நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி