தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது ஆஸ்திரேலியா சிட்னி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் அபர்ன் ரயில் நிலையம் உள்ளது. நேற்று (பிப்ரவரி 28) ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபர் ஒருவரைக் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார்.
இதனால் தூய்மை பணியாளருக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கத்தியால் குத்திய நபரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் காவல்துறையினர் மீதும் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது போலீசார் அந்த நபர் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு குண்டுகள் அவரின் நெஞ்சில் பாய்ந்தன, இதனால் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளூர் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அவர், “தமிழகத்தைச் சேர்ந்தவர். பெயர் முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என தெரியவந்தது.
இச்சம்பவம் மிகவும் கவலைக்குரியது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை, நியூ சவுத் வேல்ஸ் அலுவலகம் மற்றும் மாநில காவல்துறையுடன் சேர்ந்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று சிட்னியில் உள்ள இந்தியத் துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
பிரிட்ஜிங் விசா எனப்படும் தற்காலிக விசாவில் ரஹ்மத்துல்லா ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் காவல் நிலைய உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் துப்பாக்கிச் சூடு குறித்துக் கூறுகையில், “அந்த சமயத்தில் ரஹ்மத்துல்லாவை சுடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
கண்ணாடி கதவுகள் வழியாக அதிகாரிகளை நோக்கி அவர் ஆயுதத்தை ஏவினார். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியரை சுட்டுக் கொன்றது குறித்து முழுமையான விசாரணை அறிக்கையை நாங்கள் கேட்டிருக்கிறோம் என்றும் இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரியா
3வது டெஸ்ட்: கே.எல். ராகுல் வெளியே… சுப்மன் கில் உள்ளே!
அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!