அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Published On:

| By Selvam

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை இன்று (மே 13) விளக்கம் அளித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ”1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசிய உரைக்கு முத்துராமலிங்க தேவர் மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அவரது பேச்சு வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளதால் அண்ணாமலை மீது IPC 153A, & B (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், அண்ணாமலை மீது IPC 153A, & B உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தமிழக அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி அளித்த கடிதத்தில், The Governor of Tamilnadu hereby accords sanction for the Prosecution of Annamalai என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி அனுமதி கொடுத்திருப்பதாக, தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி என்று மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 166-ன் படி தமிழ்நாடு அரசின் உத்தரவுகள் எப்போதும் ஆளுநரின் பெயரில் தான் வெளியாகும்.

ஒரு தனி நபர் மீது IPC 153 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி கட்டாயமாகும். அதன்படி அண்ணாமலை மீது IPC 153A, & B (2) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய புகாரளித்ததால் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

அதாவது அண்ணாமலை மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என்பது இரு குழுக்கள், இரு சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிரிவுகள் என்பதால் நீதிமன்றத்தின் விசாரணைக்கு சிஆர்பிசியின் பிரிவு 196-ன் கீழ் மாநில அரசின் அனுமதி கட்டாயமாகும். அதன்பேரிலேயே அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் தோனிக்கு கோவில்: அம்பத்தி ராயுடு சொன்ன நச் கமென்ட்!

4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல்: 1 மணி நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel