வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 13) தெரிவித்துள்ளார்.
இன்று (மே 13) திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “இன்று 4ஆம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மீதமுள்ள தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், வாக்கு எண்ணப்படும்போது, தமிழகத்தில் பாமக, பாஜக அணி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தவர்…
“தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கடந்த 44 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு, மத்திய அரசுதான் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தட்டி கழிக்கிறது.
மேலும், பீகார், கர்நாடகம், ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது. தெலுங்கானாவில் வெகு விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீட்டை வழங்கி இருக்கலாம். ஆனால், வழங்கவில்லை.
இதனையடுத்தும் வன்னியர்கள் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்த பாமக சார்பில் தீர்மானித்துள்ளோம். போராட்டம் நடத்தப்படும் தேதி கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.
மேலும், “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுத்தொடர்பாக, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு எடுக்கப்படும்.
மேலும், பெண்கள் உயர்கல்வி கற்கும் வீதத்தை அதிகரிக்க வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களை விட, மாணவிகளின் தேர்ச்சி விகிதம்தான் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு நினைத்தால் இந்த விற்பனையை ஒரு வாரத்திற்குள் ஒழிக்க முடியும். காவல்துறைக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்ய முடியாது. தமிழத்தில் கஞ்சா விற்பனை காவல்துறைக்கு தெரிந்தேதான் நடைபெற்று வருகிறது.
சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு மறுநாளே விடுதலை செய்யப்படுகிறார்கள். எனவே, கஞ்சா விற்பனைக்கு எதிராக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்வெட்டு காலங்களில் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். மின்தடையை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார் ராமதாஸ்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியா? – ஆளுநர் மாளிகை விளக்கம்!
சென்னையில் தோனிக்கு கோவில்: அம்பத்தி ராயுடு சொன்ன நச் கமென்ட்!