மதுரையில் ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வளர்நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோரா பாலா கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யக் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது.
இதில் கொலைக்குத் தொடர்புடையதாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளி ரவுடி வினோத் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் வினோத்தைக் கைது செய்ய அவரை போலீசார் தேடி வந்தனர். இதில் அவர், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
வினோத் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் மாட்டுத்தாவணி பகுதிக்குச் சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கு மறைத்து வைத்திருக்கிறார் என்று விசாரணை நடத்திய போலீசார், அவரை சம்பவ இடத்துக்கு இரவு அழைத்துச் சென்றனர்.
அதுபோன்று ஆண்டாள் கொட்டாரம் பகுதியில் ஆயுதத்தை மறைத்து வைத்திருப்பதாகக் கூறியதை அடுத்து அங்கும் வினோத்தை அழைத்து சென்றிருக்கின்றனர் போலீசார்.
அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாக்க முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது காலில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வினோத்தை மீட்டு போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் மீது மேலும் பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
சென்னையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி 2 போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை பெண் துணை ஆய்வாளர் கீதா துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார்.
கடந்த வாரம் திருச்சியில் நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது தாக்கிய துரை, சோமசுந்தரம் ஆகிய ரவுடிகளை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
பிஃபா விருது: ரொனோல்டோவின் பல சாதனைகளை முறியடித்த மெஸ்ஸி
வீராணம் ஏரியில் மிதமிஞ்சிய உலோக மாசு: ஆய்வில் அதிர்ச்சி!