தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வெள்ளக்காடாக மாறியுள்ள பெங்களூருவில் ‘இன்று முதல் மேலும் சில நாட்கள் கனமழை பெய்யும்’ என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன. சில அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூருவில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.

குறிப்பாக நேற்று முன் தினம் ஒரு நாள் இரவில் மட்டும் 130 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியதால் தான் இந்த அளவுக்கு நகரத்தில் தண்ணீர் தேங்கியதாக கூறப்பட்டது.
சாலைகள், குடியிருப்புகள் பல்வேறு நிறுவனங்கள் உள்படத் தண்ணீர் புகாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு பெங்களூரு நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
காரிலோ, இரு சக்கர வாகனத்திலோ அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் ஊழியர்கள் டிராக்டர்களிலும், ஜேசிபிகளிலும் செல்லும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி மக்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை உணர்த்துகிறது.
இதனால் பெரும்பாலானா ஐடி நிறுவனங்கள் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்ய அனுமதித்துள்ளது.

தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளும், மீட்பு படையினரும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மீண்டும் சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஒரு நாள் இரவு பெய்த கனமழைக்கே நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில் மேலும் 5 நாட்கள் மழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய அறிவிப்பால் மீட்பு குழுவினர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பெங்களூருவில் உள்ள வானிலை மையத்தின் அதிகாரி டாக்டர் கீதா அக்னிஹோத்ரி அளித்த பேட்டியில் “ வான்வெளியில் ஷியர் ஜோன் உருவானதே பெங்களூரு நகரில் கனமழை கொட்டித்தீர்க்கக் காரணமாகும்.
பருவமழை காலத்தில் வழக்கமாக இதுபோன்று ஏற்படும். குறிப்பாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் இடங்கள், காற்று சுழற்றி அதிகமாக இருக்கும் இடங்களில் ஷியர்ஜோன் உருவாகும்.

கர்நாடகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழையை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் இந்த மழை வடக்கிலிருந்து தெற்காக பெய்யக்கூடும்.
அதாவது கர்நாடகத்தின் உள்வடபகுதியில் இருந்து மேகக்கூட்டம் உருவாகி தமிழகத்தின் உள்மாவட்டங்கள்வரை மழை பெய்யக்கூடும்.
வடக்குநோக்கி இந்த மேகக்கூட்டம் நகரும்போது, பருவமழையில் திடீர் இடைவெளி ஏற்படும். ஆனால் இமயமலைப் பகுதிகளிலும் அதன் அடிவாரப்பகுதிகளிலும் கனமழை பெய்யும்.
சமீபத்தில் பிரம்ம புத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு அவ்வாறுதான் ஏற்பட்டது. மாலத்தீவு ஒட்டிய பகுதியில் காற்று சுழற்றி நீடிக்கிறது. இதனால் அடுத்துவரும் நாட்களிலும் பெங்களூருவில் கனமழை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்தார்

இந்த அளவுக்கு மழை கொட்டித் தீர்க்க “ஷியர் ஜோன்” உருவானதுதான் காரணம். ஷியர் ஜோன் என்பது, மேகக்கூட்டங்கள் திரண்டிருக்கும்போது எதிர்திசைக்காற்று நிரம்பிவந்து தாக்குவதாகும்.
இந்த ஷியர் ஜோன் கர்நாடகத்தின் தெற்குஉள்பகுதியில் 4.5 முதல் 5.8 கிலோமீட்டர் அளவுக்கு பரவி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்