நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தொடர் கண்காணிப்பு பணிகளை தமிழக பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. விலங்குகளிலிருந்து பரவும் தொற்று நோய் நிபா வைரஸ். கேரளாவில் இதுவரை நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவிலிருந்து தமிழகம் வருவோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்படுகிறது.
அண்மையில் கோவையில் பணியாற்றும் நபர் ஒருவர் கேரளாவிற்கு சென்று தமிழகம் திரும்பினார். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகவில்லை என்பது தெரியவந்தது.
நிபா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகம் கேரளா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை, வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து கேரளா சென்று திரும்புவோரையும் கண்காணித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை நிபா தொற்று கண்டறியப்படவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செல்வம்
நிதி வழங்காத ‘டாஸ்மாக்’ நிறுவனம்: மூடப்படும் ஏழு ‘போதை மறுவாழ்வு மைய’ வார்டுகள்!
9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்!
பாகிஸ்தான்: அபாய கட்டத்தில் 1 கோடி 25 லட்சம் பேர்!
வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!