‘டாஸ்மாக்’ நிறுவனத்தில் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை) இருந்து நிதி வராததால் தமிழகத்தில் ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பட்டு வந்த அரசு குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் வார்டு தொடர்ந்து நடத்த முடியாமல் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த மையங்களுக்காகவே பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிகப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் எதிர்காலமும், குடிநோயாளிகளுக்கு இதுவரை கிடைத்து வந்த சிறப்பு சிகிச்சையும், கவனிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை துறை செயல்படுகிறது. இந்தத் துறையில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் போதை மற்றும் குடிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உள் நோயாளியாக சிகிச்சை பெறுவதற்கு போதை மற்றும் குடிநோயாளிகளுடன் அவர்கள் உறவினர் ஒருவர் ‘அட்டெண்ட்டர்’ ஆக இருக்க வேண்டும். அதனாலே, மனநலத் துறையில் போதை மற்றும் குடிநோயாளிகள் உள் நோயாளியாக சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. அதனாலே, குடி மற்றும் போதை நோயாளிகள் சிகிச்சை எடுக்காமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி, கோவை, வேலுார் ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (டாஸ்மாக் நிறுவனம்) மூலம் நிதி ஒதுக்கப்பட்டு குடி மற்றும் போதை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு குடி மற்றும் போதை மறுவாழ்வு மைய சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டன.
இந்த வார்டுகளில் உடன் உறவினர் (அட்டெண்டர்) இல்லாவிட்டாலும் குடி மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இந்த வார்டுகளில் தற்காலிக பணியில் செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள் 12 பேர் வரை பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மனநல மருத்துவத் துறை மருத்துவர்கள், ஆலோசனையில் இவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினர்.
டாஸ்மாக் நிறுவனம் ஒதுக்கும் நிதியை கொண்டு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இந்த சிறப்பு வார்டுகள் இயக்கப்பட்டு வந்தன. டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்கப்படும் மதுவால் பாதிக்கப்படும் குடிநோயாளிகளுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் வழங்கக் கூடிய வகையில், அந்த நிறுவன வருவாயின் ஒரு பகுதி இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது இந்த சிறப்பு வார்டுகள் தொடங்கிய இரண்டாவது ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் நிதி ஒதுக்கவில்லை. அதனால், இந்த சிறப்பு வார்டில் பணிபுரிந்த செவிலியர், மனநல ஆலோசகர்கள், இதர பணியாளர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதனால், இந்த வார்டில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகள் இதுவரை கிடைத்த சிறப்பு சிகிச்சைகள், கவனிப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“ஆண்டு முழுவதும் இந்த ஏழு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இந்த சிறப்பு வார்டுகளை செயல்படுவதற்கு ரூ.3.5 கோடி அளவிலே நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி வராததாலே இந்த வார்டில் பணியில் பணிபுரிந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதனால், டாஸ்மாக் நிறுவனம் வழங்க வேண்டிய நிதியை முறையாக பெற்று இந்த சிறப்பு வார்டுகளை முன்போல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள் இந்த மையங்களில் பணியாற்றிய மனநலத் துறையைச் சேர்ந்தவர்கள்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைத்த பிறகு உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் ஆயுள் முழுக்க அவசியமா?
Comments are closed.