ஆசிய கோப்பை இறுதிப்போட்டி எதிரொலியாக ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் முகமது சிராஜ்.
ஆசியக் கோப்பை ஒருநாள் இறுதிப் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் லசித் மலிங்கா மற்றும் சமிந்த வாஸ் ஆகியோருக்குப் பிறகு ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றார்.
இதனால் 50 ரன்களில் சுருண்ட இலங்கை அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை 8வது முறையாக கைப்பற்றியது இந்திய அணி.
முதலிடத்தில் சிராஜ்!
இந்த நிலையில், ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி எதிரொலியாக ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 9வது இடத்தில் இருந்த சிராஜ், 57 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு முன்பு 637 புள்ளிகளில் இருந்த அவர் தற்போது 694 புள்ளிகள் பெற்று தற்போது நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதமும் முதலிடத்தை பிடித்திருந்தார் சிராஜ்.
அதேவேளையில் ஆசியக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை வென்ற போதிலும் குல்தீப் யாதவ் மூன்று இடங்கள் இறங்கி 9வது இடத்தை பெற்றுள்ளார்.
டாப் 10ல் மூன்று இந்தியர்கள்!
ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்று இந்திய வீரர்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பாபர் அசாம் தொடந்து முதலிடத்தில் இருக்கும் நிலையில், சுப்மன் கில் 814 புள்ளிகளுடன் தனது 2வது இடத்தைத் தக்க வைத்துள்ளார்.
விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 708 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா அதே 10வது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்!
இதற்கிடையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் ஷகில் அல் ஹசன் 371 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பெரியார் சிலை மீது சாணம் வீச்சு: குவியும் கண்டனங்கள்!
ரூ.900 கோடி வசூலை நெருங்கும் ‘ஜவான்’!