பெரியார் சிலை மீது மாட்டுச்சாணம் வீசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ளது வடசித்தூர் கிராமம். அங்குள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனை அப்பகுதியை சேர்ந்த மக்களே கூண்டு அமைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) காலை அப்பகுதிக்கு வந்த சிலர், பெரியார் சிலை மீது மாட்டுச்சாணம் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், அப்பகுதி மக்களின் உதவியுடன் பெரியார் சிலையை தண்ணீர் விட்டு சுத்தம் செய்தனர்.
பெரியார் சிலை மீது சாணத்தை வீசி சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியதை அடுத்து நெகமம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ”கோவை அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது; குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஏற்படுத்தவும் போராடிய தலைவரின் சிலையை இவ்வாறு அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. பொது அமைதியையும், சட்டம் – ஒழுங்கையும் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும்.
இதற்கு காரணமானவர்களையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.