மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் 54வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநருக்கு எதிராக கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்திய 30க்கும் மேற்பட்டோர் இன்று (ஜூலை 13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது. ஆளுநர் ரவி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்கின்றார்.
முன்னதாக இந்த விழா அழைப்பிதழ் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. பட்டமளிப்பு விழாவிற்கு பொதுவாக பல்கலை கழகங்களின் வேந்தரான மாநில ஆளுநர்கள் அழைக்கப்படுவர். அவருடன் இணைவேந்தரான உயர்கல்வி துறை அமைச்சர், சிறப்பு விருந்தினராக கல்வியாளர் ஒருவரும் கலந்துகொண்டு மாணவர்களிடையே விழாவில் உரையாற்றுவர்.
ஆனால் இந்தமுறை ஆளுநரின் உத்தரவின்படி மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கவுரவ விருந்தினராக காமராஜர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து இணைவேந்தரான அமைச்சர் பொன்முடியிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று பட்டமளிப்பு விழாவிற்கு முன்னதாக, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அருகே ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரவி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தோழமை அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் கறுப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சாலையில் ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டு கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தர்மபுரம் ஆதீனத்துக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மயிலாடுதுறையில் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.