மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

Published On:

| By Aara

மகாராஷ்டிராவின் தேர்தல் களம் வழக்கத்திற்கு மாறாக கடும் அனல் பறக்கும் களமாக மாறியிருக்கிறது. மகாராஷ்டிராவின் தேர்தல் முடிவுகளில் என்ன மாற்றம் நடக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பல கோணங்களில் அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஏனென்றால் இந்த முறை மகாராஷ்டிராவின் களம் பெரும் வித்தியாசமானதாகவும், கடினமானதாகவும் இருக்கிறது.

இந்தியாவில் மத்தியில் யார் ஆட்சியில் அமரப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் எப்போதும் மகாராஷ்டிராவை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்த அதிக தொகுதிகளைக் கொண்டிருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். மகாராஷ்டிராவில் 48 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

மகாராஷ்டிராவில் செல்வாக்குள்ள பெரிய கட்சிகளாக பார்க்கப்படும் சிவசேனா கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது பல குழப்பங்களை அங்கு உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிராவின் தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக அனல் பறப்பதற்கு இதுவே காரணம்.

சிவசேனாவும் தேசியவாத காங்கிரசும்

கொள்கை அளவில் நெருக்கமான கட்சிகளாக பார்க்கப்பட்டவை பாஜகவும் சிவசேனாவும். ஆனால் தற்போது சிவசேனா உடைக்கப்பட்டதுடன் அக்கட்சியின் தலைமை தாக்கரே குடும்பத்திடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கே சிவசேனா கட்சி சொந்தம் என்று அறிவிக்கப்பட்டதால், சிவசேனாவின் சின்னத்துடன் பாஜக கூட்டணியில் களமிறங்கியுள்ளது ஏக்நாத் ஷிண்டே பிரிவு.

அடுத்ததாக மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் வலிமையான தலைவராக பார்க்கப்படும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அவரது உறவினரான அஜித் பவாரால் உடைக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரசின் சின்னமும் தற்போது அஜித் பவாரிடமே இருக்கிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது.

கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகள்

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும், உத்தவ் தாக்கரே தலைமையில் உடையாமல் இருந்த சிவசேனா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தமுள்ள 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் 23 தொகுதிகளை பாஜகவும், 18 தொகுதிகளை சிவசேனாவும் கைப்பற்றி மொத்தமாக 41 தொகுதிகளை பாஜக கூட்டணி தன்வசமாக்கியது. அதற்கு எதிராக காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி 1 தொகுதியையும் கைப்பற்றியது. அசாதுதின் ஓவைசியின் கட்சி மூன்றாவது அணியாக நின்று 1 தொகுதியில் வென்றது. சுயேச்சையாக நின்ற நவ்னீத் கவுர் 1 தொகுதியில் வென்றார்.

 

மொத்தமாக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் இப்போது இரண்டு பிரிவாக பாஜக, காங்கிரஸ் என இரண்டு கூட்டணிகளிலும் அங்கமாக உள்ளனர். இதனால் இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதைக் கணிப்பது தான் அரசியல் ஆய்வாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தேர்தலில் தொகுதிப் பங்கீடு

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக 28 தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 15 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும், ராஷ்டிரிய சமாஜ் பக்சா கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றன.

அதேபோல் இந்தியா கூட்டணியில் சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கடந்த முறையைப் போல பெரிய வெற்றி வாய்ப்பு இல்லை

இதுவரை நடந்து முடிந்திருக்கிற நான்கு கட்டத் தேர்தலில் 35 தொகுதிகளிலுக்கான தேர்தல் மகாராஷ்டிராவில் முடிந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த முறை வென்றதைப் போல ஒரு பெரிய வெற்றியை இந்த முறை பாஜக வெல்வதற்கு வாய்ப்பு இல்லை என்று பல அரசியல் விமர்சகர்கள் தங்கள் ஆய்வின் மூலம் சொல்கிறார்கள்.

இதன் காரணமாக மோடி எப்படியாவது மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இதுவரை 12 பேரணிகளை நடத்தியுள்ளார். பாஜக வெல்வது கடினமாக இருக்கும் என்று கணிக்கப்படும் தொகுதிகளைக் குறிவைத்து இரண்டே நாட்களில் 6 பேரணிகளை நடத்தினார்.

உத்தவ் தாக்கரேவை சாஃப்டாக டீல் செய்யும் மோடி

மோடி புனேவில் பிரச்சாரம் செய்த போது, சரத் பவாரை கடுமையாக விமர்சித்தவர், உத்தவ் தாக்கரேவை கொஞ்சம் சாஃப்ட் ஆகவே டீல் செய்துள்ளார்.  “பால் தாக்கரே எனக்கு செய்ததை நான் எப்போதும் மறக்க மாட்டேன். நான் அவருக்கு எப்போதுமே கடன்பட்டவன். உத்தவ் தாக்கரே எதிர்காலத்தில் எப்போதாவது உதவி என்று அழைத்தால், அவருக்கு உதவும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று மோடி உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு சாஃப்ட் மெசேஜைக் கொடுத்திருக்கிறார்.

பதிலடி கொடுக்கும் உத்தவ்

ஆனால் உத்தவ் தாக்கரே கடுமையான பதிலடிகளை பாஜகவிற்கு கொடுத்து வருகிறார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.  ”மோடி குழப்பத்தில் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். எங்கள் கட்சியைப் பார்த்து போலி சிவசேனா என்று சொன்னவருடன் நான் எப்படி சேர முடியும்?” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் உத்தவ்.

2014 மற்றும் 2019 தேர்தல்களில் மோடியை ஆதரித்தற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். மோடி ஒரு சர்வாதிகாரி, அவர் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மோசமான ஆபத்துக்கு உள்ளாவதுடன், 2029 இல் தேர்தலே நடக்காது என்றும் பிரச்சாரம் செய்துள்ளார்.

அனுதாப அலை

மேலும் பாஜகவின் உதவியுடன் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியை எப்படியெல்லாம் உடைத்தார் என்பதைச் சொல்லி மாநிலம் முழுக்க உத்தவ் தாக்கரே செய்த பிரச்சாரம் பல அனுதாபங்களை அவருக்கு மக்களிடையேவும், சிவசேனா தொண்டர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மகாராஷ்டிராவின் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இது வாக்குகளிலும் எதிரொலித்திருக்கிறது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

மகாராஷ்டிரா பெருமிதம்

மும்பை மாநகரத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே இந்த முறை மதத்தைக் காட்டிலும் மராத்தி பெருமிதத்தினை வலுவாக கையில் எடுத்திருப்பதால், இந்த திட்டம் முஸ்லீம்கள் மத்தியிலும் வொர்க் அவுட் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாஜக மகாராஷ்டிரா வெறுப்பு கொண்ட கட்சி என்பதை மையப்படுத்தி பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். மகாராஷ்டிராவில் இருந்து குஜாராத்திற்கு மாறிய பல தொழிற் கட்டமைப்புகளை லிஸ்ட் போட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்துள்ளனர்.

தேர்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் லோக்நிதி-CSDS அமைப்பின் பொறுப்பாளர் நிதின் பிர்மல் மகாராஷ்டிரா தேர்தலைப் பற்றி தி வீக் ஊடகத்திடம் பேசும்போது,  “விவசாயிகள் பிரச்சினையும், வேலைவாய்ப்பின்மையும் மகாராஷ்டிரா தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக பார்க்கப்பட்டிருக்கிறது.  குறிப்பாக  லாபம் தரும் மகாராஷ்டிராவின் வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்துவிட்டு, குஜராத்தின் வெள்ளை வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த மத்திய அரசின் செயல்பாடு மகாராஷ்டிரா விவசாயிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியிருப்பதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிந்தது” என்கிறார்.

விவசாயிகளின் வாக்குகளை மையப்படுத்திய விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் பாஜகவின் வாக்குகளை இது பாதிக்கும் என்கிறார். ராமர் கோயில் விவகாரம் பாஜகவிற்கு ஆதரவாக எந்த அலையையும் ஏற்படுத்தவில்லை என்பது அவர் நடத்திய கள ஆய்வின் போது வெளிப்பட்டதாகச் சொல்கிறார் நிதின் பிர்மல்.

மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் இருவருக்கும் மக்களிடையே அனுதாபம் ஏற்பட்டிருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அனுதாப அலை பாஜக கூட்டணிக்கு பல தொகுதிகளில் பின்னடைவைக் கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பாஜக நிர்வாகிகள் சொல்வது

பாஜக முக்கிய நிர்வாகிகளே கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை எண்ணிக்கை குறையும் என்பதை சொல்கிறார்கள். ”நாங்கள் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். 18 தொகுதிகளில் கொஞ்சம் கடினமாக இருக்கும். எப்படியாவது 35 ஐத் தாண்டுவோம்” என்பதுதான் பாஜகவின் முக்கியத் தலைவர்களே சொல்லும் கருத்தாக இருக்கிறது.

நிர்மலா சீதாராமனின் கணவர் சொல்லும் கணக்கு

அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரை இன்னும் பல தொகுதிகளை பாஜகவும் அதன் கூட்டணியும் மகாராஷ்டிராவில் இழக்கும் என்கிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார ஆய்வாளருமான பரகலா பிரபாகர் பாஜக மகாராஷ்டிராவில் இந்த முறை பெரும் சரிவை சந்திக்கும் என்று தனது ஆய்வின் மூலம் சொல்கிறார். கடந்த முறை பாஜக மகாராஷ்டிராவில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் 12 தொகுதிகளை இந்த முறை பாஜக இழக்க உள்ளது என்பது அவரது ஆய்வு முடிவாக இருக்கிறது.

கூட்டணிக்குள் நடக்கும் குழப்பம்

அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே பிரிவினரைப் பொறுத்தவரை அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு சரியாக வேலை செய்யவில்லை என்று பாஜக நிர்வாகிகள் பலர் கருதுகிறார்கள். அவர்கள் மோடியின் மூன்றாவது ஆட்சிக்கு வேலை செய்வதை விட, அடுத்த 6 மாதங்களில் நடைபெற உள்ள மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தியே வேலை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அவர்களது பிரச்சாரங்களில் மோடி ஆட்சியின் திட்டங்களைக் காட்டிலும் அவர்களின் சொந்த பிரச்சினைகளே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. மேலும் அவர்களைக் காட்டிலும் பாஜக பிரம்மாண்ட வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றால், சட்டமன்றத் தேர்தலின் தொகுதிப் பங்கீட்டில் தங்களுக்கான இடங்கள் குறைக்கப்பட்டுவிடும் என்பதும் அவர்கள் பாஜகவிற்கு சரியாக வேலை செய்யாததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் மகாராஷ்டிராவில் மராத்தா சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மனோஜ் ஜாரங்கே பாட்டில் மகாராஷ்டிரா அரசாங்கம் தங்களுக்கு துரோகம் செய்து விட்டது, அதற்கு பாடம் புகட்டுவோம் என்று அறிவித்தது மராத்தா வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் பல பாதிப்புகளை பாஜகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உருவாக்கியிருப்பதை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடியும் என்கிறார்கள்.

மொத்தமாக பார்த்தோமென்றால் பாஜக இழக்கும் ஒவ்வொரு தொகுதியும் பாஜகவிற்கு மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் மகாராஷ்டிராவில் அதிக தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் அது பாஜகவிற்கு நிச்சயமாக பெரும் பின்னடைவாகவே அமையும்.

-விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்வாதி மாலிவால் புகார்: கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது!

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel