டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை கடுமையாக தாக்கினார் என்று ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் குற்றம்சாட்டும் நிலையில், இது பாஜக செய்த சதி என்று ஆம் ஆத்மி கூறுகிறது.
டெல்லியில் வரும் 25ஆம் தேதி 6ஆம் கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் பிரச்சாரத்துக்காக உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தை நடத்தி வெளியே வந்தார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
இந்தநிலையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி.யுமான சுவாதி மாலிவால், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உதவியாளரால் தான் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்.ஐ.ஆர் சொல்வது என்ன?
கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற போது, அவரது தனிசெயலாளர் பிபவ் குமார் தன்னை கடுமையாக தாக்கினார் என்று குற்றம்சாட்டி ஸ்வாதி மாலிவால் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் டெல்லி சிவில் லைன்ஸ் காவல்நிலைய போலீசார் பிபவ் குமார் மீது மே 16ஆம் தேதி எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
கொலைமிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், “பிபவ் குமார் 7,8 முறை முழு வேகத்துடன் என்னை கன்னத்தில் அறைந்தார்.
நான் முதல்வரின் கேம்ப் ஆபீஸுக்கு சென்று அவரது தனி செயலாளரை அழைத்தேன். என்னால் உள்ளே செல்ல முடியாததால் அவரது வாட்ஸ் அப்புக்கு மெசேஜ் செய்தேன். எனினும், எந்த பதிலும் வரவில்லை.
பிபவ் குமார் இல்லாததால் முந்தைய காலங்களில் நான் எப்போதும் செய்தது போல் பிரதான கதவு வழியாக குடியிருப்பு பகுதிக்குள் சென்றேன். அங்கு இருந்த ஊழியர்களிடம், முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.
அவர்கள், முதல்வர் வீட்டில் இருப்பதாக கூறி டிராயிங் ரூமில் காத்திருக்கச் சொன்னார்கள்.
அப்போது ஊழியர்களில் ஒருவர் வந்து, முதல்வர் என்னைச் சந்திக்க வருவதாகச் சொன்னார். ஆனால் திடீரென்று, பிபவ் குமார் அறைக்குள் வந்தார்.
அவர், எந்தவித காரணமும் இன்றி என்னை திட்ட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்… முதல்வரை கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அவர் என் முன் வந்து 7-8 முறை என்னை அறைந்தார். அப்போது உதவி கேட்டு கத்தினேன். என்னை பாதுகாத்து கொள்வதற்காக எனது காலால் பிபவ் குமாரை தள்ளிவிட்டேன்.
உடனே அவர் என் மீது பாய்ந்து, கொடூரமாக என்னை இழுத்து தாக்கினார். சட்டையை இழுத்ததில் பட்டன் அறுந்துவிட்டது. கீழே விழுந்து அருகில் இருந்த மேஜையில் இடித்துகொண்டேன். தொடர்ந்து உதவிக்கு கத்தினாலும் யாரும் வரவில்லை.
என் மார்பு, வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் பிபவ் குமார் உதைத்து என்னைத் தாக்கினார். நான் மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து தாக்கியதால் வலியில் துடித்தேன். பிபவ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்வாதி மாலிவால் கூறியதாக எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜராகி மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளார்.
இதற்கிடையே ஸ்வாதி மாலிவால் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் மாலிவாலும் பாதுகாவலர்களும் உரையாடுவது பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில் பிபவ் குமார் இல்லை.
இந்த நிலையில், “ பிபவ் குமார் தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.. இதற்காக அவர்தான் வீடியோ வெளியிட்டுள்ளார். அங்குள்ள முழு வீடியோ பதிவையும் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஸ்வாதி மாலிவால் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் வீட்டில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஸ்வாதி மாலிவால் என்ன நடந்தது என நடித்துகாட்டினார்.
இந்த சம்பவத்தை பாஜக கையில் எடுத்திருக்கும் நிலையில் “இந்தச் சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பாஜகவினரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றும் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆம் ஆத்மி கட்சியின் பெண் உறுப்பினர் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் குறித்து கெஜ்ரிவால் அமைதியாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது உண்மையில் நம்ப முடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சம்பவத்திற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்மிருதி இரானி, அவரால் தனது சொந்த வாழ்க்கையையே நிர்வகித்துகொள்ள முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜக செய்த சதி என்று என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறுகையில், “பாஜக சதி செய்கிறது. இந்தச் சதியின் கீழ் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் வீட்டிற்கு பாஜக அனுப்பியது. கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி ஸ்வாதி முதல்வர் இல்லத்துக்கு வந்துள்ளார். முதல்வரின் உதவியாளர் தன்னை தாக்கியதாக கூறுகிறார். ஆனால் அந்த வீடியோவில் பாருங்கள், சோபாவில் அமர்ந்து பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் செய்கிறார்.
அந்தசமயத்தில் முதல்வர் கெஜ்ரிவால் அங்கு இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் அவரும் புகாருக்கு ஆளாகியிருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Thailand Open 2024: அசத்தும் சாத்விக், சிராக், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டா