கதையின் மையமாய் உள்ளாட்சித் தேர்தல்
’உறியடி’ படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனிப்பட்ட ரசிகர்களைச் சம்பாதித்தவர் விஜயகுமார். அது வெளியாகி 8 ஆண்டுகள் ஆனபிறகும், அந்த ரசிகர்கள் பன்மடங்காகியிருக்கின்றனரே தவிர குறையவில்லை. இத்தனைக்கும் ‘உறியடி 2’, ‘பைட் கிளப்’ ஆகிய படங்களில் மட்டுமே அவர் நாயகனாகத் தோன்றியுள்ளார்.
அந்த ஆச்சர்யத்தைத் தக்கவைக்கும் வகையில் நான்காவதாக அவர் நடித்த ‘எலக்சன்’ பட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. உள்ளாட்சித் தேர்தல் பின்னணியில் அதன் கதை இருப்பதைக் காட்டியது. கூடவே அரசியல் படத்திற்கே உரிய ஆக்ஷனும் த்ரில்லும் நிறைந்திருப்பதாகச் சொன்னது. தமிழ் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான ‘எலக்சன்’ திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிட்டும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
அரசியல் குயுக்திகள்!
வேலூர் மாவட்டத்திலுள்ள நல்லூரைச் சேர்ந்தவர் நடராசன் (விஜயகுமார்). நெடுஞ்சாலை பகுதியிலுள்ள தாபா ஒன்றில், அவர் சிலரோடு மோதலில் ஈடுபடுவதாகத் திரைக்கதை தொடங்குகிறது. நடராசனின் தந்தை நல்லசிவம், தமிழ்நாடு மக்கள் கழகத்தின் தீவிரத் தொண்டர். அக்கட்சிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்.
2006 உள்ளாட்சித் தேர்தலில் நல்லூர் ஊராட்சி வேட்பாளராகக் கூட்டணியில் உள்ள உழைக்கும் மக்கள் கட்சியைச் சேர்ந்த தியாகுவை முன்னிறுத்துகிறது கட்சித் தலைமை. அதனை நல்லசிவம் ஏற்கிறார். தனது ஆருயிர் தோழனான தணிகாசலம் சுயேச்சையாகப் போட்டியிடுவதை, அவர் ஆதரிக்கத் தயாராக இல்லை. அந்த தேர்தலில் தியாகு வெற்றி பெற, தணிகாசலம் தோல்வியடைகிறார்.
நல்லசிவத்தைத் தனது வாழ்நாள் எதிரியாகவே நோக்குகிறார். தணிகாசலத்தின் மகள் செல்வியும் (ரிச்சா ஜோஷி) நடராசனும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். ஆனால், இருவரையும் ஒன்று சேரவிடாமல் அவர்களது சாதி தடுக்கிறது. செல்வியை வேறொருவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார் தணிகாசலம். அதிலிருந்து அக்குடும்பத்தின் பக்கமே அவர் திரும்புவதில்லை.
தணிகாசலத்தின் மகன் சுதாகரும் (திலீபன்) நடராசனின் சகோதரி கணவர் கனியும் (பாவெல் நவகீதன்) நண்பர்கள். குடும்பத்து பகையை மீறி, இருவரும் நட்பு பாராட்டுகின்றனர். 2011ஆம் ஆண்டுவாக்கில் நடராசனுக்கும் ஹேமாவுக்கும் (ப்ரீத்தி அஸ்ரானி) திருமணம் நடைபெறுகிறது. இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகின்றனர். ஹேமா கருவுறுகிறார்.
அந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. உழைக்கும் மக்கள் கட்சியின் முடிவை மீறி, சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தியாகுவும் அவரது மகன் மூர்த்தியும் அறிவிக்கின்றனர். அதனை சுதாகரும் கனியும் எதிர்க்கின்றனர்.
நல்லூர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் மூர்த்திக்கு எதிராக, தனது மச்சினன் நடராசனை முன்னிறுத்துகிறார் கனி. தொடக்கத்தில் தயங்கும் நடராசன் பிறகு சம்மதிக்கிறார். தனக்கு ஆதரவு தேடும் நோக்கில் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த காதர் பாய் உட்படப் பல பிரமுகர்களைச் சந்திக்கிறார். அவர்களது ஆதரவைப் பெறுகிறார்.
அதே நேரத்தில், கட்சித் தலைமை அறிவித்த கணேசன் என்பவரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்கிறார் நல்லசிவம். தேர்தல் முடிவில் கணேசன் வெற்றி பெறுகிறார்.
மூர்த்தி மட்டுமல்லாமல் ஒன்றியத் தேர்தலில் போட்டியிட்ட தியாகுவும் தோல்வியடைகிறார். அதனைக் கேள்விப்பட்டதும் அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. தந்தையின் நிலை கண்டு ஆத்திரமுறும் மூர்த்தி, நடராசனைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார். இன்னொரு வேட்பாளராக இருந்து வாக்குகளைப் பிரித்த சேவியர் மற்றும் அவரது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கூறுகிறார்.
அதையடுத்து நடராசன், ஹேமா, காதர் பாய் பயணிக்கும் வாகனத்தைச் சிலர் தாக்குகின்றனர். அதிலிருந்து இறங்கி அவர்கள் தப்பியோடும்போது காதர் பாய் சில மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.
கருக்கலைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹேமா மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவர் முழுமையாகக் குணமடையச் சில மாதங்கள் ஆகின்றன.
அந்த சிகிச்சைக்காக மட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தலில் மக்களுக்குப் பணம் கொடுக்கும் நோக்கோடு வட்டிக்கு ஒருவரிடம் கடன் வாங்குகிறார் நடராசன். அந்தப் பணத்தைத் திருப்பித் தர முடியாமல் அவரது குடும்பம் தத்தளிக்கிறது. இந்த நிலையில், மீண்டும் 2016ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இம்முறை நடராசனின் மனைவி ஹேமா வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்கிறார் கனி. ஆனால், நடராசன் அதற்குச் சம்மதிப்பதாக இல்லை.
அதன்பிறகு என்ன நடந்தது? ஹேமா தேர்தலில் களமிறங்கினாரா, இல்லையா? தாபாவில் யார் மீது நடராசன் தாக்குதல் நடத்துகிறார்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
ஒரு கதையாக இதனைச் சொல்வது கடினம். காரணம், இதிலுள்ள பல்வேறு பாத்திரங்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான முரண்கள். அதன் பின்னணியில் அரசியல்ரீதியிலான வெற்றிகளும் தோல்விகளும் கூடவே குயுக்திகளும் இருப்பதைக் காட்டுகிறது இத்திரைப்படம். அந்தச் சித்தரிப்பே இப்படத்தின் பலம்.
சீரியசான படம்!
‘சேத்துமான்’ தந்த இயக்குனர் தமிழ் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். அழகிய பெரியவன், நாயகன் விஜயகுமார் உடன் இணைந்து அவர் இதற்கு வசனம் எழுதியிருக்கிறார். பல காட்சிகளில் வசனங்கள் மிக எளிமையாக அமைந்துள்ளது சிறப்பு.
குறும்படப் பாணியில் தொடங்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் சினிமாவுக்கான மினுமினுப்பைத் திரையில் காட்டியிருக்கிறது மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு. ஏழுமலை ஆதிகேசவனின் கலை வடிவமைப்பானது, தேர்தல் வாக்கு எண்ணிக்கையைக் காட்டும் காட்சியில் களத்திற்கே நேரடியாகச் சென்ற பிரமிப்பை ஊட்டுகிறது.
ஸ்டண்ட் கொரியோகிராஃபர் ஸ்டன்னர் சாம், இதில் விஜயகுமாரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்தியிருக்கிறார். இயல்பாக மனிதர்கள் இடையே நடக்கும் மோதல்களைக் கொஞ்சமாய் அழகியலுடன் காட்டும் வகையில் அவற்றை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமாரின் பணியானது இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் பெரும்பாங்காற்றியிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை நடப்பது, தேர்தல் முடிவுக்குப் பிறகான வன்முறை, கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சிகளின் போது ரத்தினச் சுருக்கமாக ஷாட்களை அடுக்கி நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார். செறிவானதொரு படம் பார்த்த திருப்தையை உருவாக்கக் காரணமாகியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையில் ’மன்னவன் வந்தானே’, ‘தீரா என்னாசை’ பாடல்கள் நம்மை ஈர்க்கின்றன. ஆனாலும், பரபரப்பான திரைக்கதைக்கு நடுவே அந்த மெலடி மெட்டுகள் இடையூறுகளாகவே விளங்குகின்றன. அதே நேரத்தில், அந்தக் குறையைப் பரபரப்பூட்டும் அவரது பின்னணி இசை மறக்கடிக்கிறது.
இசையமைப்பாளர் கே தந்திருக்கும் தேர்தல் பாடலான ’நல்லூரு மண்ணின் மைந்தன்’, நமக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தை நிச்சயம் தரும். விஜயகுமார் தான் நடிக்கும் படங்கள் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவில் இருக்கக் கூடாது என்றெண்ணுகிறாரா அல்லது அரசியலும் ஆக்ஷனும் நிறைந்த படங்கள் தான் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்குமென்று விஜயகுமார் கருதுகிறாரா? தெரியவில்லை. ஆனால், ‘எலக்சன்’ கதையில் அவரது இருப்பு இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கிறது.
‘அயோத்தி’யில் நம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி, இதில் நாயகி. ஒரு சாதாரண கிராமத்துப் பெண்ணாக நாம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்குத் திரையில் அவரது தோற்றம் அமைந்துள்ளது. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கின்றனர் என்பதைக் காட்டும் வகையில், விஜயகுமார் உடன் ரிச்சா ஜோஷி வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதில் ஜார்ஜ் மரியான், நாச்சியாள் சுகந்தி, திலீபன், பாவல் நவகீதன் உட்படப் பலர் நடித்துள்ளனர். அவர்களது பெயர்கள் நமக்குத் தெரியாதபோதும், சரியாக அடையாளம் காணும் அளவுக்குப் படத்தில் அவர்களது பெர்பார்மன்ஸ் உள்ளது.
தொடக்கம் முதல் இறுதி வரை, ‘இது ஒரு சீரியசான படம்’ என்று சொல்லும்விதமாகவே காட்சியமைப்பு உள்ளது. சண்டைக்காட்சிகளில் ரத்த வாடை கொஞ்சம் அதிகம் தான். அதுவே, நல்லதொரு பொழுதுபோக்கு படத்தைப் பார்க்க எண்ணி தியேட்டருக்கு வருபவர்களை ஓரமாய் நிற்க வைக்கும்.
தமிழ்நாட்டிலுள்ள பிரதானக் கட்சிகள், அதற்கடுத்த நிலையிலுள்ள கட்சிகளின் நிலைமை, அவை உள்ளாட்சித் தேர்தலை அணுகும் விதம், களத்தில் செயல்படும் கட்சித் தொண்டர்களின் மனநிலை, அங்கு உருவாகும் மனப்பூசல் மற்றும் பகை என்று பலவற்றைப் பேசுகிறது ‘எலக்சன்’. அக்கட்சிகளைச் சார்ந்தவர்கள் மத்தியில் அவை பேசுபொருளாகலாம்; சிலர் எதிர்ப்புகளைத் தீவிரமாகத் தெரிவிக்கலாம். நிச்சயமாக, லாஜிக் சார்ந்து இதில் பல குறைகளைக் கண்டுபிடிக்க நேரிடலாம்.
’படத்தில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் கற்பனையே’ என்று டைட்டிலின் போது அறிவிப்பு வெளியிட்டாலும், ஊடகங்களில் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு தேர்தல் தகவல்களை நினைவூட்டும் வகையிலேயே படத்தின் எழுத்தாக்கம் அமைந்துள்ளது. ’அது படைப்பு சுதந்திரத்தில் சேரும்’ என்றெண்ணுபவர்கள் ‘எலக்சன்’ படத்தைப் பார்க்கலாம். ’எதுக்கு இந்த அக்கப்போரு’ என்பவர்களுக்கு, நிறைய கமர்ஷியல் திரைப்படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தவெக-வுடன் கூட்டணியா? – விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!
மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!