கோவையில் வாக்காளர் பட்டியலில் இந்தியில் வாக்காளரின் பெயர் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தற்போது பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பணிகள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் கோவை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1,290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு பழைய எண் 22, புதிய எண் 69ல் பூத் எண் 842, வரிசை எண் 633ல், சாய்பாபா காலனியில் வசிக்கும் மனோஜ் குமார் என்பவரின் பெயர் மற்றும் அவரது தந்தை பெயர் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில், “ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர் மனோஜ் குமார் மற்றும் அவரது தந்தை சூரஜ் ஆகியோரின் பெயர் இந்தியில்தான் இடம்பெற்றிருந்தது. அதனால் கோவை மாநகராட்சி வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலிலும் மாற்றமில்லாமல் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் 8ஆவது படிவம் மூலம் விண்ணப்பித்து தனது பெயரைத் தமிழில் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,