DMK's plan in Coimbatore

அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

அரசியல்

பிரதமர் மோடி  மீண்டும்  மீண்டும்  தமிழகத்துக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நேற்று மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வந்த பிரதமர் மோடி மற்ற மாநிலங்களில் நடத்துவது போல தமிழ்நாட்டிலும் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் மெதுமெதுவாக பயணித்து மக்கள் திரளில் பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார் மோடி.

கோவை பொதுவாகவே மத உணர்வுள்ள மண் என்று அறியப்பட்ட நிலையில்,  கோவையை குறிவைத்து பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையை மையமாக வைத்தே பல மாதங்களாக வேலைகளை செய்து வருகிறார்,

இந்த நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்களில் தகவல்கள் வருகின்றன.

இத்தொகுதியில் பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுவார் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வந்த நிலையில், அண்ணாமலை தற்போது கரூரா, கோவையா என்றால் கோவையையே விரும்புவதாக பாஜகவில் சொல்கிறார்கள்.

அப்படி அண்ணாமலை ஒருவேளை கோவையில் போட்டியிட்டால் அவருக்கு எதிரான வலுவான வேட்பாளரை நிறுத்துவதற்காகத்தான்… கோவை மக்களவைத் தொகுதியை தற்போது வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து  இம்முறை கேட்டுப் பெற்றிருக்கிறது திமுக.

அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து யார் போட்டியிடுவது என்ற ஆலோசனையும் திமுக தலைமை கழகத்தில் தீவிரமாக நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தோம்.

“கோவையில் டாக்டர் கோகுல், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி திமுகவுக்கு வந்த மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் முதலில் பேசப்பட்டன.

ஆனால் அண்ணாமலை கோவையில் களமிறங்க தயாராகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் திமுகவின் வியூகம் மாறியது. அண்ணாமலை கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் அதிமுகவும் அதே கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவரைத் தான் வேட்பாளராக நிறுத்தும்.

பாஜக, அதிமுக இரு கட்சிகளும் கவுண்டர் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தினால், திமுக கோவையில் அடர்த்தியாக இருக்கும் நாயுடு சமுதாய வேட்பாளரை நிறுத்தத் திட்டமிடுகிறது.

அந்த வகையில் தொழிலதிபர் நந்தினி ரங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன.

நந்தினி ரங்கசாமி கோயம்புத்தூர் ஜிஆர்ஜி நிறுவனங்கள், மற்றும் சந்திரா டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருக்கிறார்.  கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் செயலாளராகவும்  இருக்கிறார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தென் மண்டலத்தின் புதிய துணைத் தலைவராக இப்போது செயல்பட்டு வருகிறார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தபோதே செந்தில்பாலாஜியை நந்தினி ரங்கசாமி சந்தித்துள்ளார். தொழில் துறை ரீதியான விவகாரங்கள் பற்றி இருவரும் விவாதித்துள்ளனர்.

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு தொழில் துறை கூட்டமைப்பினர் சார்பில் கோவையில் அஞ்சலிக் கூட்டம் நடத்தியபோது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கலைஞர் தீட்டிய பற்பல திட்டங்களைப் பட்டியலிட்டு உரையாற்றி அப்போதே ஸ்டாலின் உள்ளிட்டோரின் கவனம் ஈர்த்தார் நந்தினி ரங்கசாமி.

இப்படி திமுகவோடு ஏற்கனவே நெருங்கிய தொடர்பில் இருக்கும் நந்தினி ரங்கசாமியை கோவை தொகுதி வேட்பாளராக அண்ணாமலைக்கு எதிராக களமிறக்க திமுகவில் ஆலோசனை தீவிரமாக நடந்து வருகிறது.

அதேநேரம் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ஏற்கனவே செயல்பட்ட அடிப்படையில் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கோவை தொகுதிக்கு சில வேட்பாளர்களை தலைமையிடம் பரிந்துரைத்துள்ளார். நாளை மார்ச் 20 ஆம் தேதி திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையின் மூவ்மென்ட்டுக்கு ஏற்றாற்போல் திமுகவின் நகர்வுகள் இருக்கும்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாகாளிக்கிழங்கு ஊறுகாய்!

திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை : மோடி

+1
0
+1
1
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

1 thought on “அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்: கோவையில் திமுகவின் திட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *