modi said people not support dmk
இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று (மார்ச் 18) பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்தார்.
பெங்களூருவில் இருந்து கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து பேரணி தொடங்கும் இடமான கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயில் பகுதிக்கு வந்தார் மோடி.
அங்கு அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த திறந்தவெளி காரில் ஏறிய பிரதமர் மோடியுடன் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோரும் ஏறினர்.
சாய்பாபா கோயில் பகுதியில் இருந்து, வடகோவை மேம்பாலம், சென்ட்ரல் தியேட்டர், சிந்தாமணி ரவுண்டானா, காமராஜபுரம் சிக்னல் வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்துக்கு பேரணி வந்தது.
வழிநெடுகிலும் இருபுறமும் மலர்கள் தூவி பாஜகவினரும், மக்களும் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். மோடி மோடி என்று கோஷங்களும் எழுப்பினர்.
அவர்களை பார்த்து இரு கைகளையும் அசைத்தவாறு வந்தார் பிரதமர் மோடி. 7.15 மணியளவில் பேரணி நிறைவடைந்தது.
இறுதியாக, வாகனத்திலிருந்து இறங்கிய மோடி, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் நினைவாக அஞ்சல் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகையில் உள்ள புகைப்படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்த ரோடு ஷோ குறித்து நேற்றிரவு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
“தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை.
கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள்! மாலை நடந்த ரோட்ஷோ பல ஆண்டுகள் நினைவில் நிற்கும். இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துக்கள் பெரிதும் போற்றப்படத்தக்கவை” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.
1998 ல் நிகழ்ந்த கோயம்புத்தூர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. இந்த நகரத்திற்கு வந்திருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை விமானம் மூலம் கேரளா செல்கிறார். அங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு சேலம் வரும் பிரதமர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பாமக 10 தொகுதிகளில் போட்டி”: அன்புமணி, அண்ணாமலை கூட்டாக பேட்டி!
பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!