தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, இதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் மதுரையில் அதிமுக சார்பில் இன்று(ஜூன் 21) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசுகையில், “முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது, புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது, தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக போதை பொருள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
இரண்டு மாவட்டத்தில் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது.
பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால், இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது.
அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது.
பி.டி.ஆர். மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி, எடப்பாடி பழனிச்சாமி கோட்டைக்கு போவது உறுதி.
மக்கள் படும் துன்பங்களை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை, பொம்மை முதலமைச்சராக உள்ளார்.
தினந்தோறும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டு வருகிறார், மழையால் சென்னை தத்தளிக்கிறது, மக்கள் படும் துன்பம் ஸ்டாலினுக்கு தெரிகிறதா?
அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுதான் நடக்கும் தற்போது கிடையாது என்று அவரே தெரிவித்து விட்டார்.
இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை.
மணல் கொள்ளையை பற்றி புகார் கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்படுகிறார்.
சேலத்தில் மணல் கொள்ளையை தட்டி கேட்ட அதிகாரியை வெட்ட முயற்சி செய்கின்றனர்.
இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியர் தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என தெரிய வருகிறது என்றும்,
அதிமுக ஆட்சி காலத்தில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20 ல் மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவிற்கு புகழை சேர்க்கும் என்றும் கூறினார்.
இராமலிங்கம்
செந்தில் பாலாஜிக்கு எப்போது சுயநினைவு திரும்பும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன்