“கேட்டதோ 37,907 கோடி, வந்ததோ 276 கோடி”: மத்திய அரசை சாடிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.37,907 கோடி ஒதுக்கக்கோரி மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், வெறும் ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 27) குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ள சேதம் மற்றும் தென் மாவட்டங்களில்  அதி கனமழை பெய்தது.

இதனையடுத்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.37,907 கோடி ஒதுக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார்.

மேலும், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் தமிழகத்திற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததால், தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ரூ.276 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிட்யிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

துன்பமாக இருப்பதை எப்படி நிறுத்துவது?

ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: ஹர்பஜன் ஓபன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share