தமிழ் சினிமாவின் மிக நேர்த்தியான கமர்சியல் படங்களை தந்துள்ள இயக்குநர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் இயக்குநர் ஹரி. ‘ நான் 60 மார்க்குக்கு தான் படம் எடுக்குறேன் ‘ என பல பேட்டிகளில் இயக்குநர் ஹரி கூறுவதைப் பார்க்க முடியும். ஆக, தான் எடுக்கும் படங்கள் எந்த வகையான படங்கள்? அது எந்த மாதிரியான பார்வையாளர்களை குறி வைத்து தயாரிக்கப்பட வேண்டும், போன்ற விஷயங்களில் மிக தெளிவான பார்வை உள்ளவர் ஹரி.
அப்படிப்பட்ட இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ ரத்னம் ‘ திரைப்படத்தில் வழக்கமான ‘ஹரி- யிஷங்கள்’ தென்பட்டாலும் பல புதுமையான அம்சங்கள் இயக்குநர் ஹரியின் ஸ்டைலில் தெரிந்ததைக் காண முடிந்தது. ஆனால் அது மட்டுமே இந்தப் படத்தை ஒரு முழுமையான திரைப்படமாக ஆக்கிவிடவில்லை என்பதே ‘ ரத்னம் ‘ திரைப்படத்தின் சுருக்கமான விமர்சனம்.
இயக்குநர் ஹரியின் திரைப்படம் என்றாலே பறக்கும் கேமராக்கள், சீறும் கார்கள், அதற்குள்ளாக ஜன்னலில் அரிவாளை நீட்டியபடி வரும் வில்லனின் அடியாட்கள், அவர்களை துரத்தும் கோபக்கார ஹீரோ போன்ற விஷயங்கள் அனைத்தும் இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனால், அதை கொஞ்சம் புதுமையாக கையாள முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஹரி. மெதுவான எடிட் கட்ஸ், நீளமாக எடுக்கப்பட்ட காட்சிகள் எனப் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஹரி.
படத்தின் கதாநாயகிக்கு ஒரு ரவுடி கும்பலால் ஆபத்து. அதை ஹீரோ எப்படி தடுத்து நிறுத்தி கதாநாயகிக்கு ஒரு அரணாக இருக்கிறார் என்பதே ரத்னம் படத்தின் ஒன்லைன். ஆனால், படத்தின் ஹீரோ ஏன் தனக்கு பழக்கமில்லாத பெண்ணிற்காக இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதற்கு படத்தில் காட்டப்படும் காரணம் புதுமையாக இருந்தது. அதற்கு நிச்சயம் இயக்குநர் ஹரியை பாராட்டலாம். மேலும், எந்த ஒரு தேவையில்லாத டூயட், காதல் காட்சிகளை தவிர்த்து ஹீரோ – ஹீரோயினை அந்தந்த கதாபாத்திரங்களாகவே நமக்கு காட்டியதும் சிறப்பு.
ஏறத்தாழ இதே போன்ற ஒரு கதைக்களத்தைக் கொண்டது தான் ‘ கில்லி ‘ திரைப்படம். ஆனால், அதில் கதாநாயகனின் எதார்த்தமான கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் விஜய்யின் நடிப்பு என சரவண வேலுவை நம்ம வீட்டு பிள்ளையாக பார்க்க வைத்திருக்கும். அதுவே அந்தப் படத்தின் வெற்றி. ஆனால், இந்தப் படத்தில் வரும் ‘ ரத்னம் ‘ கதாபாத்திரத்தின் மேல் நமக்கு அவ்வளவு பெரிதாக எந்தவித பச்சாதாபமும் வராமல் போனதற்கு காரணம் சுமாரான கதாபாத்திர வடிவமைப்பா ? அல்லது விஷாலின் மிகையான நடிப்பா? என்பது தெரியவில்லை.
மேலும், சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார் விஷால். அதிலும் மிக நீளமாக அமைக்கப்பட்ட ஒரு சேசிங் காட்சி அமைக்கப்பட்ட விதத்தில் இருந்து அத்தனையும் சிறப்பு. அதைத் தவிர்த்து கோபமாக பேசும் சில காட்சிகளில் ‘ சண்டைக்கோழி ‘ காலத்திலேயே உரைந்து விடுகிறார் விஷால். ஆனால் ஒரு சில எமோஷனல் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார். பொதுவாக ஹரி திரைப்படங்களில் கதாநாயகன் மிக புத்திசாலியாக இருப்பதாக பல காட்சிகள் இருக்கும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அப்படியான காட்சிகள் பெரிதாக இல்லை. இந்தக் கதாபாத்திரத்திற்கு அப்படியான காட்சிகள் தேவைப்படவும் இல்லை.
இந்தப் படத்தின் முதல் பெரிய பலவீனம் தேவி ஶ்ரீ பிரசாத் இசை. பாடல்களைப் பொறுத்தவரை எந்த ஒரு பாடலும் கேட்கும் படியாக இல்லை. காட்சிக்கு பொருந்தாத பின்னணி இசை நம்மை மேலும் சோதிக்கிறது. ஏறத்தாழ படத்தின் கதைக்குள் வருவதற்கே பல நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார் ஹரி. அப்படியான நீண்ட கதாபாத்திர அறிமுக காட்சிகளும் மிக சுமாராகவே இருந்ததால் அதை ரசிக்க முடியவில்லை.
அதற்கு பிறகு கொஞ்சம் பரபரப்பாகும் கதை, இரண்டாம் பாதியின் நடுவில் மீண்டும் திசை திரும்பி மிக சுமாராக நிறைவடைகிறது. அந்த இரண்டாம் பாதியில் கவுதம் வாசுதேவ் மேனன் வரும் ஒரு சீன் சிறப்பு. அதிலும் மாற்றி மாற்றி தமிழ் ஆங்கிலம் என தனது டிரேட் மார்க் ஸ்டைலில் பேசி அசத்தியுள்ளார் கவுதம்.
ரவுடிகளில் ஹீரோ ஒரு நல்ல ரவுடி. வேலூரில் போலீஸ் செய்ய வேண்டிய வேலையை அவரே செய்வார் போன்ற காட்சிகள் நாம் ஏற்கனவே பழக்கப்பட்டவை தான். என்றாலும் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் கதாநாயகன் துதி பாடுதல், ரவுடியிசத்தைப் போற்றுதல் போன்ற விஷயங்களை திரைப்படத்தில் வைப்பார்கள் என்ற சலிப்பு வந்தால் நீரும் என் தோழரே. மேக்கிங்கில் பல புதிய முயற்சிகள் செய்த ஹரி திரைக்கதை எழுத்தில் மட்டும் கொஞ்சம் தேங்கி இருப்பதாகத் தெரிகிறது. மற்றபடி நம்மை ரொம்ப சோதித்து விடாத ஒரு சுமாரான படம் தான் ‘ ரத்னம் ‘ .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா