தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 27) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல் 27 முதல் மே 1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதன்காரணமாக, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால், மதியம் 12 முதல் மூன்று மணி வரை பொதுமக்கள் தேவை இல்லாமல் அதிகம் வெளியே வர வேண்டாம். மது மற்றும் தேநீர் அருந்துவதை பெரும்பாலும் தவிர்க்கவும் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.