பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!
மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஒரு வாரமாக நிலவி வந்தது.
நேற்று முன்தினம் பாமக எம்.எல்.ஏ அருள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனால் அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது என தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று மாலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
தைலாபுரத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளார்களைச் சந்தித்த அக்கட்சி பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், “பாஜகவுடன் கூட்டணி என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனர் ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்” என்று பேட்டியளித்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 19) காலையிலேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை வாசலில் வந்து சால்வை அணிவித்து வரவேற்றார் அன்புமணி ராமதாஸ்,
உள்ளே சென்றதும் ராமதாஸ், அன்புமணி மற்றும் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் நலம் விசாரித்துகொண்டனர்.
அப்போது என்.டி.ஏ.கூட்டணியில் சீனியர் மோஸ்ட் லீடர் ஐயாதான் என அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து தன்னுடன் வந்தவர்களை அண்ணாமலை, ராமதாஸுக்கு அறிமுகப்படுத்தினார். பாமகவைச் சேர்ந்தவர்களை அன்புமணி ராமதாஸ் அறிமுகப்படுத்தினார். அப்போது பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் இருந்தனர்.
இந்தநிலையில் 7.30 மணிக்கு கூட்டணி ஒப்பந்தத்தை எல்.முருகன் ராமதாஸிடம் வழங்கினார். ஒப்பந்தத்தை ராமதாஸ் படித்து பார்த்த பின்னர் அண்ணாமலையிடம் சில சந்தேகங்களை கேட்டார். தொடர்ந்து அண்ணாமலை, எல்.முருகன், ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தனி அறைக்குச் சென்று ஆலோசனை நடத்தினர்.
இதைதொர்ந்து பாஜக – பாமக ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமக சார்பில் ராமதாஸும், பாஜக சார்பில் அண்ணாமலையும் கையெழுத்திட்டனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள்!
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவுக்கு 7,000 கண்டெய்னர்களில் ராணுவ உபகரணங்கள்!