எங்கு ஓடினாலும் விடமாட்டோம்: அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டது குறித்து ஜோ பைடன்

Published On:

| By Kavi


அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை சிறிய ரக ஏவுகணையை ஏவி கொன்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு தான் அல் கொய்தா. இதன் தலைவராகச் செயல்பட்டு வந்த அய்மன் அல்-ஜவாஹிரியை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, 2011ஆம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

அய்மன் அல்-ஜவாஹிரி செப்டம்பர் 11, 2001 அமெரிக்காவின் இரட்டை கோபுர தற்கொலை தாக்குதல் நடத்தக் குழுவை ஒருங்கிணைத்தவர் என்றும், ஏமனில் USS கோல் கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தி 17 அமெரிக்க மாலுமிகள் உயிரிழக்கக் காரணமாக இருந்தவர் எனவும் நம்பப்படுகிறது.

இதற்கான பழிவாங்குதலுக்காகக் காத்திருந்த அமெரிக்கா தற்போது அய்மான் அல்-ஜவாஹிரியை கொன்று, நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருக்கிறது.

ஜூலை 31 காலை, ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள தனது இல்லத்தின் பால்கனியில் அய்மன் அல்-ஜவாஹிரி தனியாக நின்று கொண்டிருந்தபோது, சிஐஏ ஆளில்லா விமானம் மூலம் இரண்டு ஹெல்ஃபயர்களை ஏவி கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவாஹிரியின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலிருந்தபோதும் மற்ற யாரும் தாக்கப்படவில்லை.

அல்கொய்தா அமைப்புக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் அதிரடியாகப் பாகிஸ்தானில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறைந்திருந்தது. ஆனால் பின்லேடனுக்கு அடுத்த இடத்திலிருந்த ஜவாஹிரி இருந்தால் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று கருதிய அமெரிக்கா நேரம் பார்த்து அவரையும் கொன்றிருக்கிறது.

இந்த தகவல் வெளியாகி உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதை உறுதிப்படுத்தினார்.

நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்க மக்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களைக் கண்டுபிடித்துத் தண்டிக்கும்” என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


இன்று (ஆகஸ்ட் 2) அதிகாலை 5.40 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கான உறுதியையும் திறனையும் அமெரிக்கா தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.

இன்றிரவு நாங்கள் அதைத் தெளிவுபடுத்தினோம். எவ்வளவு காலம் எடுத்தாலும், நீங்கள் எங்கு ஓடி மறைந்திருந்தாலும், நாங்கள் உங்களை விடமாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

கலை

டிஜிட்டல் திண்ணை: காங்கிரசை ஏன் திமுக மதிப்பதில்லை? சத்தியமூர்த்திபவனில் வெடித்த குரல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel