உயர் காவல்துறை அதிகாரி அருண் உடன் மற்ற பெண் காவலர்களை இணைத்து சவுக்கு சங்கர் பேசியதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 5) தெரிவித்துள்ளார்.
அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாடுகள் எழுந்தன.
அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை நேற்று அதிகாலை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்து சென்றனர்.
இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர காவல்துறையினர் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர் பெண் காவலரை பற்றி அப்படி தரக்குறைவாக பேசாமல் இருந்திருக்கலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. மத்தியில் உள்ள ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மோடி பிரதமராக இருந்தாலும் சரி, அமித்ஷா பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களுக்கான கொள்கையை வகுப்பது ஆர்.எஸ்.எஸ். தான்.
உயர் காவல்துறை அதிகாரி அருண் உடன் மற்ற பெண் காவலர்களை இணைத்து சவுக்கு சங்கர் பேசியதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது. கஞ்சாவை விற்பதே அரசுதான்.
இதற்கு முன்னதாக அரசுதான் சாராயம் விற்பனை செய்தது. தற்போதெல்லாம் கஞ்சா விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்வதில்லை. ஏனெனில் கஞ்சா விற்பதே அரசுதான்.
’திராவிட முன்னேற்றக் கழகத்தை’ அப்படி சொல்வதை விட ‘திருடர்கள் முன்னேற்ற கழகம்’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.
அரசு என்பது மக்களுக்கான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதுதான் மக்களுக்கான ஆட்சி, மக்களாட்சி.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கக்கூடாது என மக்கள் போராடுகிறார்கள், மாணவர்கள் போராடுகிறார்கள், ஆசிரியர்கள் போராடுகிறார்கள்.
இப்படி அனைவரும் தெருவில் நின்று போராடிக் கொண்டிருக்கும்போது, “ஈடில்லா ஆட்சி இரண்டாண்டே சாட்சி”ன்னு சொல்கிறார்கள், அவர்களை பார்த்து “இருக்கிறதா மனசாட்சி” என்று தான் கேட்க தோன்றுகிறது.
இங்கு நடப்பது மக்களுக்கான ஆட்சி இல்லை, சேவை அரசியலோ, செயல் அரசியலோ இல்லை, இங்கு நடப்பது முழுவதுமாக “செய்தி அரசியல்”. 1000 ரூபாய் கொடுப்பதற்காக 6 மாதத்திற்கு முன்பு இருந்து விளம்பரம் செய்த அரசு திமுக தான்.
மோடியும் தேர்தலுக்கு சரியாக 2 வாரங்களுக்கு முன்பு வந்து சிலிண்டர் விலையை குறைத்தார். அதுவும் செய்தி அரசியல் தான்” என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒலிம்பிக் கனவிற்கு செக் வைத்த NADA… மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கண்டனம்!
’கள்ளக்கடல்’ எச்சரிக்கை எதிரொலி : திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை!
Comments are closed.