”எதிரிகளின் வெற்று வதந்திகளை புள்ளிவிபரம் மூலம் அறுத்து எறிய வேண்டும்” என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; ‘தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்துகொண்டு மாநிலத்தின் நிலை உயர்த்திடவும், உரிமை மீட்டிடவும், தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திட வேண்டியிருப்பதால், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுடன் கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை.
எனினும், வாய்ப்பு வரும்போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்துக் களிப்புமிகக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “மக்கள் நலனைக் காக்கும் அரசாக, மக்களுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குகிற அரசாக, ஓர் அரசு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற அரசாகத் திகழ்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிட, அரசியல் எதிரிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித்திட்டம் தீட்டி, பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்பிட நினைக்கிறார்கள்.
வதந்திகளை அறுத்தெறிய வேண்டும்
நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவர்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உண்டு.
எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப்பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும்.
எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள்; அவற்றைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவார்கள்; அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்கவேண்டும்.
ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கெதிராகத் திருப்பிட முனைவார்கள். ஒவ்வொரு உடன்பிறப்பும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், தேநீர்க்கடை – திண்ணைப் பிரச்சாரம் மூலமாகவும் கழகக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாறிட வேண்டும்.
கழக அணிகளுக்குக் கிடைத்த பெருமை
உடன்பிறப்புகளின் உயர்ந்த உணர்வாலும் உடலில் ஓடும் உதிரத்தாலும் உருவான இலட்சிய இயக்கம் இது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையை மிக வலுவாகக் கட்டமைத்தவர் பேரறிஞர் அண்ணா.
அதனை மேலும் வலிவும் பொலிவுமாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தலைமைக் கழகம் முதல் கிளைக் கழகம் வரையிலான வலுவான அமைப்புக்குத் துணை நின்று பணியாற்றுவதற்காக சார்பு அமைப்புகளான பல்வேறு அணிகளை உருவாக்கித் தந்தார் தலைவர் கலைஞர்.
அத்தகைய சார்பு அமைப்புகளில் ஒன்றான கழக இளைஞரணியில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய உங்களில் ஒருவனான நான், இன்று தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களுக்காக முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறேன்.
பல்வேறு அணிகளைச் சேர்ந்த கழகத்தினர் அமைச்சர்களாக, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுதான் கழக அணிகளின் செயல்பாடுகளுக்குக் கிடைத்த அருமை – பெருமை.
ஒருபோதும் கைவிடப்படார்
கழக சட்ட விதிகளையொட்டி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி உள்பட 23 அணிகள் உள்ளன. அனைத்து அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, முழுமையான அறிவிப்புகள் முரசொலியில் வெளியாகியுள்ளன.
உழைப்புக்கேற்ற வாய்ப்பு, உருவாகும் வாய்ப்புக்கேற்ற பொறுப்பு என ஒவ்வொரு நிர்வாகியின் தகுதியையும் கவனத்திலும் கருத்திலும் கொண்டே இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.
இயன்ற அளவு கழகத்தின் மூத்தவர்கள் – இளையவர்கள் என அனைத்துத் தரப்பினரும் வேறுபாடு சிறிதுமின்றிப் பங்கேற்கும் வகையில் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு சிலருக்கு வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். கிடைத்திருக்கும் வாய்ப்பு போதவில்லை என ஒரு சிலர் நினைக்கலாம். கழகத்தை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்.
உண்மையாக உழைப்பவர்களை உங்களில் ஒருவனான நான் என் கவனத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அடுத்தடுத்த வாய்ப்புகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும். நான் இருக்கிறேன் உங்களுக்காக!
திமுகவின் ஜனநாயக யுத்தம்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இடம்பெற்ற சில வீரர்கள் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறாமல் போகலாம். அதற்கடுத்த ஆட்டத்தில் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்ற சூழல் உருவாகும். சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் அணியின் இலக்கு வெற்றிக் கோப்பையை வெல்வதுதான்.
கழக அணிகளின் நோக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் வெல்ல வேண்டிய களம், விளையாட்டுக் களம் அல்ல. கருத்தியல் போர்க்களம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிற ஆரிய – திராவிட பண்பாட்டுப் போரில், திமுக தொடர்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
அணிகள் ஆயத்தமாக நின்றிட வேண்டும்
இனத்தின் மீதும், மொழியின் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நேர்மையாக எதிர்கொண்டு வருகிறோம். அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி தொடர்ந்திட, கழக அணிகள் அனைத்தும் அணிவகுத்து ஆயத்தமாக நின்றிட வேண்டும்.
‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் – சமுதாய – பண்பாட்டுப் பகைவரை வென்றிடவும், நம் தாய்மொழியாம் தமிழையும், தாய்நிலமாம் தமிழ்நாட்டையும், இந்திய ஒன்றியம் முழுவதற்குமான ஜனநாயகத்தையும் காத்திடக் களம் காண வேண்டிய கடமை வீரர்களாக கழக அணியினர் திகழ வேண்டும். கொள்கைகளும் சாதனைகளும்தான் நமக்கு வாளும் கேடயமுமாகும்.
அதனைத் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள்வரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இனப் பகைவர்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வஞ்சகச் சூழ்ச்சிகளால் வலை விரித்து தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவர்களுக்குக் கிஞ்சித்தும் இங்கே இடமே இல்லை என்பதை நிரூபிக்கக் கூடிய ஆற்றல்மிக்க படையாக கழக அணிகள் செயல்பட வாழ்த்துகிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!