nlc protest thangam thennarasu today speech

பாமகவினர் வன்முறை: தங்கம் தென்னரசு கண்டனம்!

அரசியல்

வன்முறை போர்வையை போர்த்திக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 28) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு இந்த பரவனாற்று மாற்று பாதை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இதை செய்தால் தான் அந்த சுரங்கத்திற்கு உண்டான மற்ற பணிகள் செய்ய முடியும். சுரங்கப் பணிகளுக்கான அனைத்து பணிகளும் மேற்கொண்டால்தான் மின்சாரம் உற்பத்தி பாதிக்காமல் இருக்கும். மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருந்தால் தான் நமக்கு உரிய மின்சாரம் வழங்கப்பட கூடிய சூழல் நிலை வரும்.

பரவனாற்று மாற்று பாதை அமைக்கும் பொழுது அங்கே ஏற்கனவே பயிர் நடவு செய்திருக்கக்கூடிய பயிர் இழப்பீட்டு தொகையாக ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் அளவிற்கு என்.எல்.சி இடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவோம் என்று உறுதி அளித்திருந்தோம். இதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 23 லட்சம் வரை வழங்கப்பட்ட தொகை தற்போது 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

என்.எல்.சி க்கான இந்த நில எடுப்பு பணிகளில் உள்ளூரில் இருக்கக்கூடிய விவசாயிகள், என்.எல்.சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்த்தை நடத்தி இழப்பீடு தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இன்றைக்கு என்.எல்.சி யில் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து போராட்டம் அறவழியில் நடைபெறுவதைத் தாண்டி அந்த போராட்டம் வன்முறை கலவரமாக வெடித்திருப்பது என்பது மிகவும் கஷ்டத்திற்குரியது.

இந்த வன்முறை போராட்டம் காரணமாக அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நில உரிமையாளர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையை அமைதியாக அணுகினாலும் சில இடங்களில் வெளி ஊர்களில் இருந்து வெளிநபர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டு தூண்டுதலில் வந்தவர்களால் வன்முறை ஏற்பட்டு இருக்கிறது. இந்த வன்முறை என்பது மிக மிக கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்த வன்முறையால் 20க்கும் மேற்பட்டோர்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு பிரச்சினையை பேசும்பொழுது அதை பேசி தீர்வு காண முடியும் ஏற்கனவே பல்வேறு கட்ட காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. அதை விடுத்து வன்முறைக்கு குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவசாயிகளை பலவீனமாக சித்தரித்து, விவசாயிகளை கேடயமாக வைத்துக்கொண்டு இத்தகைய வன்முறை நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் நடந்தாலும் தமிழக அரசு அனுமதிக்காது. வன்முறை போர்வையை போற்றிக் கொண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்.

அறவழியில் போராட்டம் நடத்துவதாக கூறியதால் அனுமதியை தமிழக அரசு வழங்கியது. ஜனநாயக ரீதியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், அவர்களது உணர்வுகளை மதிப்பளித்து தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் இதை மீறி நிறுவனத்தின் பணிகளை பாதிக்கும் வகையில் வேண்டுமென்றே வன்முறைக்கான களத்தை உருவாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாத்து செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை ”என நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இராமலிங்கம்

என்.எல்.சி விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!

“அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம்” – உதயகுமார்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *